| வினையியல் - நூற்பா எண். 3 | 189 |
‘தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின்’ - நாலடி 75 ‘நட்பாடல் தேற்றாதவர்’ - கு. 187 என்றும், அவனைத் தேற்றிப் பிரித்தான். அவனைத் தேற்றிக் கெடுத்தான். என்றும், இவை சொல் ஒன்றே தன்வினையும் பிறவினையும் ஆயின. ‘தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றி’ - தொ. சிறப்புப் பாயிரம். ‘பொருள்முதல் ஆறினும் தோற்றி’ ந. 321 ‘தொடர்ந்து தொழில் அல காலம் தோற்றா’ - ந. 275 இவன் வெளுத்தான்; -இவை போல்வனவும் அது. [வி-ரை: தேற்றாஒழுக்கம் - தேறாஒழுக்கம் - தன்வினை. நட்பாடல் தேற்றாதவர் - தேறாதவர் -தன்வினை. ஏனைய இரண்டும் பிறவினை. தேற்று என்பதே தன்வினையும் பிறவினையும் ஆகும். ஆறினும் தோற்றி - ஆறினும் தோன்றி - தன்வினை. காலம் தோற்றா - காலம் தோற்றுவிக்கமாட்டா - பிறவினை. பெயர் தோற்றி - பெயரைத் தோற்றுவித்து - பிறவினை. இவன் வெளுத்தான் - தன்வினை. இவன் (துணியை) வெளுத்தான் - பிறவினை. தோற்று, வெளு என்பன தன்வினையும் பிறவினையும் ஆயின. பிரயோகவிவேகம் 35ஆம் காரிகை உரையில், ‘‘தேற்றா ஒழுக்கம் ஒருவன் கண் உண்டாயின்’’ (நாலடி. 75) ‘நட்பாடல் தேற்றாதவர்’ (கு. 187) என்புழித் தேறாஒழுக்கம் தேறாதவர் எனப்பொருள்படுமால் எனின், இதனைப் பகுதிப் பொருள்விகுதி என்றும் சுவார்த்தத்தில் வந்த காரிதம் என்பர்’’ என்று கூறுதல் காண்க.] |