இதுமட்டோ? இம் முதல்நிலைகள் வினையாகாது கல்லை உருட்டினான், வில்லை வளைத்தான், கொல் செய்த கூர்வாள் [கொல் - கொல்லன்] ‘செல் அரித்த ஓலை’ (திரு - கல) [செல் - கறையான்] ‘சொல் அருஞ்சூல் பசும்பாம்பின்’ (சீவக. 53) [சொல் - நெல்] ‘புல் தலை காண்பரிது’ - கு. 16 எனப் பெயராயின. இது மட்டோ? இவை தொழிற்பெயராங்கால், கற்றல் - கற்குதல் - கற்பு - கல்வி எனவும், கோறல் - கொல்லுதல் - கொல்லல் - கொலை எனவும் வேறுபட்டன. இதுமட்டோ? இவை பிறவினை யாங்கால், கற்பி, நிற்பி, நிறுத்து, நிறுவு, நிறு, நிலைப்பி, எனவும், செல்வி, செலுத்து எனவும் வேறுபட்டன. ‘நிறு’ என்பது உயிரீற்று முதல்நிலை அன்றோ எனின், நீ நில் என்னும் உயிரீற்று முதல்நிலை தானே ஒன்றனை நிற்கச்செய் என்னும் பொருள்படத் திரிந்ததென்க. (நில் - தன்வினை; நிறு - பிறவினை;) இங்ஙனம் பலபல முதல்நிலைக் குணங்களை விரிக்கின் பெருகும். அமைக. எழுத்து என்னும் தொழிற்பெயர் அப்பொருளைவிட்டுப் பால்பகா அஃறிணைப் பொதுப்பெயராய்’ அப்பொருளை விட்டு ஓவியம் முதலியன போலன்றி அகரம் னகரம் முதலியன வடிவை உணர்த்தும் சிறப்புப் பெயராய். அப்பொருளை விட்டு ஒலியை உணர்த்தும் ஆகுபெயராய், அப்பொருளைவிட்டு அவ்வொலியினது இலக்கணத்தை உணர்த்தும் இருமடி ஆகுபெயராய், அப்பொருளை விட்டு அவ்விலக்கணத்தை உணர்த்தும் நூலினை உணர்த்தும் மும்மடி ஆகுபெயராய். அப்பொருளை விட்டு ‘இங்ஙனம் கூறிற்று எழுத்து, இங்ஙனம் அறிவித்து எழுத்து’ எனக்கருமக் கருத்தாவையும், கருவிக்கருத்தாவையும் உணர்த்தும் நான்மடி ஆகுபெயராய் நின்று பல பொருள்பட்டது காண்க. இங்ஙனம் பலபல தொழிற்பெயர்க் குணங்களை விரிக்கின் பெருகும். அமைக |