பக்கம் எண் :

 சிறப்புப் பாயிரம்61

நன்னூல்...................திருவுளம்பற்றினன்:

வி-ரை: நன்னூல் முதலிய சிறிய நூல்களை ஆராய்ந்தும், பழைய காப்பயிங்களைப் பலகாலும் கற்றும், அவைகளிலும் இலைமறை காய் போல அருமையாகக் காணப்படும் குற்றமற்ற விதிகளும், வடமொழியில் கடல் போலப் பரந்துபட்டுள்ள இலக்கண முடிபு உடைய தமிழ்நூற் செய்திகளும், கல்வி வல்லார்க்கு எளிமையாகப் புலனாகுமாறு, தன் கூரிய மதியான் நுனித்தறிந்து மூன்று இயல்களை அமைத்து ‘அறிவுக்குரிய செய்திகளின் தொகுப்பு இது’ என நன்மக்கள் நுவலுமாறு இலக்கணக் கொத்து என இந்நூற்குப் பெயரிட்டமைத்தான்.

வளமையின்.....................தேசிகனே:

தன் நில வளப்பத்தால் புகழ் ஓங்கிய சோழநாட்டில், அம்பை ஒத்த கூரிய கண்களை உடைய உமாதேவியார் சிறப்புற்றிருக்கும் திருவாவடுதுறையில், குற்றம் நீங்கிய ஆன்மாக்களுக்கு அருள் பாலிக்கும் மாசிலாமணியாம் அம்பலவாண தேசிகன் என்று சான்றோர்களும் புகழுமாறு அவதரித்த குரு மகாசந்திதானத்தின் திருவடிகளைத் தலைமேற் கொண்டு விளங்கும். அமிழ்தினும் இனிமையுடைய தமிழ்மொழி வளரும் திருநெல்வேலியில், நிறைமதி போலக் களைகளால் நிரம்பிய சிறப்புடைய சுவாமிநாதன் என்ற இயற்பெயரினனாய், ஒளியைத் தரும் ஞானத்தையே செல்வமாகக் கொண்ட ஈசான தேவன் என்னும் தீட்சா நாமமுடைய குரவனாவான்.

இச் சிறப்புப்பாயிரம் இயற்றியவர் இன்னார் என்பது அறியக் கூடவில்லை. இதன்கண் சிறப்புப்பாயிர இலக்கணங்கள் அமைந்துள்ள வாற்றை நோக்குவோம்:

ஆக்கியோன் பெயர் - சுவாமிநாதன் எனும் ஈசானதேவன்.

வழி-தொல்காப்பிய உரைகள், நன்னூல் முதலிய சின்னூல், பழைய காப்பியங்கள், வடமொழிநூல்கள் ஆகியவற்றின்வழி.

எல்லை தென்புவி.