அறிக. சில செய்திகளை நேரே நூற்பாக்களால் உணர்தல் இயலாதாயின், உபலக்கணத்தால் உணர்க. முன்கூறிய விதிக்குப் பின் கூறிய விதி மாறுபட்டிருப்பின், ஒன்றனை வேறொரு நூல் குறிப்பிடும் கருத்தாகக் கொள்க. சில நாள்களே கற்றால், சில செய்திகளைக்கூட உள்ளவாறு அறிதல் இயலாது; பல நாள்கள் கற்பின், பற்பல செய்திகள் போதரும். விரைவாக நூல்களைப் பார்த்தால், ஒன்றும் புலனாகாது; விரையாது கற்றால், ஒன்றும் புலனாகாமல் போகாது. இனி வாசிக்கவேண்டியவற்றில் உள்ளத்தைச் செலுத்தாது, முன்பு வாசித்து உணர்ந்தவற்றில் உள்ளத்தைச் செலுத்துக. உரைகளைப் பலகாலும் நோக்குதலை விடுத்து நூற்பாக்களையே பலகாலும் நோக்குக. மந்தன் மழை போலப் பொருள்கொடுப்பினும் அவனை விடுத்து, அறிவாளனுக்குப் பொருளுதவி செய்தாவது அவனோடு பழகுக. வேற்றுச் செய்திகளில் உள்ளம் ஈடுபட்டிருப்பின், ஆசிரியன் ஆகி இருப்பவன்கூட, நூலில் ஈடுபடுதலைத் தவிர்க. மாணாக்கன், கற்பிக்கும் ஆசிரியன் சொற்றவாறு ஒழுகிக் கல்விகற்க’’. ‘‘இவ்வளவு சிறப்பினவாகிய கருவிகள் பலப்பல உள. அவை பல நூல்களிலும் கூறப்பட்டுள்ளன’’. ‘‘நல்லவர்களுக்கு இதுபோன்ற சிறப்புடைய நூல்கள் கிடைப்பின் - தம்மினும் கடையார் இலர் என்று கருதி, இறுமாப்பின்றிக் கற்றவரை இகழாது, நற்குணம் நற்குலம் நற்கலை நற்றவம் இவை உடையவரைப் பணிந்து, பழிபாவங்களுக்கு அஞ்சிப் புண்ணியம் புகழ்களைக் காத்து, பிறப்பு இறப்பு ஆகிய துயரங்களிலிருந்து பிழைத்து, இரைதருவாருக்குப் பயன்தரும் பசுக்களைப்போலப் பயன்படுவர். ஆதலின், இத்தகைய நூல்களை அவர்களுக்கே பாடம் சொல்லுதல் வேண்டும்’’. ‘‘அல்லோர்க்கு இதுபோன்ற நூல்கள் கிடைப்பின் - எம்மினும் உயர்ந்தார் இலர் என்று இறுமாப்புற்று இகழ்ந்து, நற்குலம் நற்குணம் நற்கலை நற்றவம் இவை உடையாரைப் பணியாது ஒழுகி, பழிபாவங்களைத் தேடி, புண்ணியம் புகழ்களைப் போக்கிப் பிறப்பு இறப்புக்களில் தவறு செய்து, பாம்பிற்கு இரையளிப்பவருக்கு அது தீப்பயன் அளிப்பது போலத் தீங்கே தருவர் ஆதலின், அவருக்குப் பாடம் சொல்லுதல் நன்றன்று’’. |