பக்கம் எண் :

132இலக்கணக் கொத்து 

உருபுகள் தோன்றும் இடம்

24பகுபதம் பகாப்பதம் இருவகைத் தொடர்ப்பதம்
வினைமுற் றுப்பெயர் குறிப்புமுற் றுப்பெயர்
தொழிற்பெயர் ஆதியின் தோன்றும்எட்டு உருபே.

உருபு ஆறே உள்ளன, எட்டு உருபு என்றது என்னை எனின்,

‘ஏற்கும் எவ்வகைப் பெயர்க்கும்ஈ றாய்ப்பொருள்
வேற்றுமை செய்வன எட்டே வேற்றுமை’                               -ந. 291

எனத் தேற்றேகாரத்தானும்,

‘இருநான்கு, உருபும் உறழ்தர நாற்பதாம் உருபே’                        -ந. 240

என இனைத்தென அறிந்த உம்மையானும் என்க. அன்றியும் விளியுருபு, தொல்காப்பிய விளி மரபினுள் காண்க.

[வி-ரை: பகுபதம், பகாப்பதம், இருமொழித்தொடர், பன் மொழித்தொடர், தெரிநிலை வினையாலணையும் பெயர், குறிப்பு வினையாலணையும்பெயர், தொழிற்பெயர் என்பனவற்றை எட்டுருபுகளும் அடுத்து வரும்.

பெயர்ச்சொல்லை முதல் வேற்றுமையாக்க முதல் வேற்றுமை உருபு ஏறி நீங்கும் என்பர் வடநூலார். பெயர்ச்சொல் தானே முதல் வேற்றுமையாம் என்பர் தமிழ் நூலார். பெயர்ச்சொல் ஈற்றின் ஓர் எழுத்து மிகுதலும், ஈறுதிரிதலும், ஈறுகெடுதலும், ஈற்றயல்திரிதலும் முதலாயின விளிவேற்றுமை உருபு என்பது கொள்ளப்படும்.

‘விளிகொள் வதன்கண் விளியோடு எட்டே’ என வேற்றுமை எட்டு என்றுகுறிப்பிட்ட தொல்காப்பியனார், எழுவாய் முதலிய ஏழு வேற்றுமைகளையும் வேற்றுமையியலில் கூறி, விளி வேற்றுமையை விளிமரபு என்ற இயலில் விளக்கியுள்ளார்.

நன்னூலார் ‘எட்டே வேற்றுமை’ எனத் தேற்றேகாரத்தால் உறுதிப்படுத்தியும், இரு நான்கு உருபும்’ என இவ்வளவு என்று வரையறுக்கப்பட்டுள்ள பொருள்களுக்கு வழங்கப்படும் முற்றும்மையை வழங்கியும் வேற்றுமை எட்டே என்பதனை விளக்கியுள்ளார்.