‘மாறாக் காதலர் மலைமறந் தனரே ஆறாக் கட்பனி வரல்ஆ னாவே ஏறா மென்தோள் வளைநெகி ழும்மே’ -மாறா, ஏறா என்பன பெயரெச்சம். ‘தொடர்ந்து தொழில் அல காலம் தோற்றா, வேற்றுமைக்கு இடனாய்’ - தோற்றா - வினையெச்சம். செய்யா என்னும் வினையெச்சம்-விதிவினை. செய்யா என்னும் பெயரெச்சம்-மறைவினை. நடத்தலைச் செய்யாவாகிய குதிரைகள் கெட்டன-இது அஃறிணைப் பன்மைப் பெயர். செய்யும் யாவும் ஆவும்-இவை பலமொழி. மறையும் வினையும் இயற்சொல்லும் திரிசொல்லும் ஒரு மொழியும் முற்காட்டியவற்றுள் அடங்கும். [வி-ரை: செய்யா என்னும் பெயரெச்சம் மறை. செய்யா என்னும் வினைமுற்றும் மறை. செய்யா என்னும் வினையெச்சம் விதி. செய்யா என்னும் பெயரெச்சம், வினையெச்சம், வினைமுற்று மூன்றும் வினை. செய்யா என்னும் பெயரெச்சம் செய்யாத என்ற சொல்லின் திரிசொல். ஏனைய இயற்சொல். இவை யாவும் ஒரு மொழி செய்யா என்பதனைச் செய்+ஆ, செய்+யா என்று பிரித்து வயலில் உள்ள பசு, வயலில் உள்ள யாமரம் என்றாற்போலப் பொருள் செய்யும் நிலையில் பலமொழி. இனி, செய்யா என்னும் எதிர்மறைப் பெயரெச்சம் இயல்பாகிய சொல் செய்யாத என்பது அதன் திரிபே என்பது தொல்காப்பியம், சங்கச் செய்யுட்கள் இவற்றை நோக்கின் நன்கு புலப்படும் செய்தியாதல் காண்க] தொடர்மொழி ஆதியாப் பலவே ஆகும் என்ப.
|
‘ஆதி’ என்றதனால், செய்யும் என்னும் வாய்பாடு பொது முற்றாயும், எச்சமாயும், நிகழ்காலமாயும், எதிர்காலமாயும், முன்னிலை உயர்திணைப் பன்மைச் சிறப்புமுற்றாயும், உயிரும் உயிர்மெய்யும் கெடுதலும், உந்துஆகலும் போல்வன எல்லாம் கொள்க. உண்டு முதலாயினவும் அது. |