[வடமொழியுள் உயிர் 16, மெய் 35 ஆக எழுத்துக்கள் 51 என்பதே பிரயோகவிவேக நூலார் கருத்தாகும். த்ர, ஞ்ய என்பவற்றைச் சேர்த்து ஐம்பது மூன்று என்பார் நன்னூலார். அவர் மதத்தைப் பின்பற்றியவர் இவ்வாசிரியர். தமிழில் முதலெழுத்து முப்பது என்பதனுள் கருத்துவேறுபாடின்று.] 2 | ஒவ்வொரு பாடையி னுள்ளே ஓரின் பலநூல் மாறு படுமே |
சார்பெழுத்து மூன்று, பத்து, இது ஒருபாடை நூல் மாறுபாடு. [வி-ரை: சார்பெழுத்து மூன்று என்னும் தொல்காப்பியம். பத்து என்னும் நன்னூல் முதலியன.] 3 | ஒவ்வொரு நூற்கட லுள்ளே ஓரின் எழுத்துச் சொல்பொருள் யாப்புஅணி ஐந்தனுள் ஒன்றனை ஒன்றே ஒழிக்கும் |
நெடில் தொடர்க்குற்றுகரம் எழுத்தினுள்ஈரலகு; யாப்பினுள் ஓர் அலகு. ‘பால்போலும் மொழி’ சொல்லினுள் விரி: அணியினுள் தொகை. ‘துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர்’ - குறள் 1165 ‘கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து’ - குறள் 496 இவை சொல்லினுள் வெளிப்படை; முறையே அகப்பொருளினும் புறப்பொருளினும் குறிப்பு. இவை ஒரு நூலுள் ஐந்தும் மாறுபாடு. ஒன்றே என்றதனால் ஒழித்தல் எளிது என்க. [வி-ரை: கடல்போலப் பரப்புடைய ஓரிலக்கண நூலுள் கூறப்பட்டுள்ள எழுத்து சொல் பொருள் யாப்பு அணி என்ற ஐம்பகுப்புக்களில் ஒரு பகுப்பில் கூறப்பட்ட செய்தி பிறிது ஒரு பகுப்பில் விலக்கப்படுதலும் உண்டு. |