பக்கம் எண் :

 நூலமைப்பு : ஒழிபியல்27

பொருளாய் அடுக்கல், பல பொருட்கே ஒரு சொல்லாய் அடுக்கல், இயல்பாய் அடுக்கல், விகாரமாய் அடுக்கல் முதலிய பல வகைப்படும்.

அடுக்கு அல்லாத சொற்களும் சொல்லமைப்பால் அடுக்குத் தொடர்போலத் தோன்றுதலும் உண்டு.

துணிவாவது, பொருளைப் பொருள் என்று கூறுதல், பொருள் அல்லதனைப் பொருள் என்று கூறுதல், இதுபொருள் அன்று என்று தெரிந்தும் இதனையே பொருளாகக் கொள்ளுதல் என மூவகையாகக் கொள்ளப்பட்டுள்ளது.

அன்பு அருள் ஆசை அறிவு அறியாமை ஆகிய ஐந்தினால் துணிதலும் முற்கூறிய மூவகைத் துணிபுகளுள் அடங்கும்.

சொற்றொடர் பல சேர்ந்தவழி, அவை, தெரிவிக்கும்பொருளை ஒட்டி, ஒரு தொடர் - பல தொடர் என்று இரண்டாகப் பகுக்கப்படும்.

எழுத்துத் திரிபு, சொல் திரிபு, பொருள் திரிபு என்பன ஏற்புழி நிகழ்தலும் உண்டு.

பல பொருட்கு ஒரே வடிவமாகிய சொற்கள் ஓசையை அடிப்படையாகக் கொண்டே பிரித்து உணரப்படும் அச்சொற்கள் தனிமொழி தொடர்மொழி இரண்டிலும் வரும். தனிமொழி வினைமொழியையே சாரும். தொடர்மொழி சொல் வேறுபடாது பொருள் வேறுபடுதல், பொருள் வேறுபடாதுசொல் வேறுபடுதல், பொருள் சொல் ஒருங்கே போய் வேறுபடுதல் என மூவகைப்படும்.

எடுத்தல் படுத்தல் என்ற இரண்டே சிறப்பான ஓசைகளாம்; பின்னர் நலிதல் ஓசையோடு ஓசை மூன்றாயிற்று; விலங்கலொடு சேர்த்து ஓசை நான்கு என்பாரும் உளர்.

ஒரு பொருளைக் குறிக்கப் பல வாய்பாடுகளும், பல பொருள்களைக் குறிக்க ஒரு வாய்பாடும் வருதலும் உண்டு.