அன்றியும், அவர் பெயரியலில் கொண்ட விகுதிகளும், வினை யெச்சத்திற்குக் கொண்ட பன்னிரண்டு விகுதிகளும், தொல்காப்பியர் அவ்வெச்சத்திற்குக்கொண்ட பின் - முன் - கால் - கடை - வழி - இடத்து முதலிய விகுதிகளும், அவ்விருவரும் எடுத்து ஓதாத அவா உண்டேல் - அற்றால் - பாடி - ஆடி - ஆய் - போய் முதலிய விகுதிகளும், மூன்றனுள் அடங்காத ‘மகன் எனல் மக்கட் பதடி எனல்’ - கு. 196 முதலிய பலவகை வியங்கோள் விகுதிகளும், இன்னும், பாட்டு, நக்கு, தேற்று, வீச்சு, ஓத்து முதலியவற்றுள் இடைநிலைத் தன்மைப்பட்டு ஒற்றுக்களாய் வரும் விகுதிகளும், அளவிறந்து வருதல் நோக்கி என்க. [வி-ரை: ஏல், ஆல், இ, ய், முதலிய வினையெச்ச விகுதி; அல் - வியங்கோள் விகுதி; பாடு என்பது பாட்டு எனப் பெயராயிற்று. நகு என்பது - நக்கு என இறந்த கால வினையெச்சமாயிற்று. தேறு என்பது தேற்று எனத் தன்வினையும் பிறவினையும் வீசு என்பது வீச்சு எனப் பிறவினையாயிற்று. [ஆயிற்று. ஓது என்பது ஓத்து எனப் பெயராயிற்று. இவற்றில் இடையில் வந்த ஒற்றுக்கள் விகுதியின் செயலைச் செய்வன.] அவர் எடுத்தது ஓதியது சிறப்பு விகுதியே என்றது என்றால் பெற்றீர் எனின், அன் விகுதியை ஈரிடத்தும் கூறுதலானும், ‘இன்ன பிறவும் பொதுச்சா ரியையே' - ந 244 என்றாற்போலப் பொது விகுதிகளே என்னாது ‘வினையின் விகுதி’ (ந. 140) என்றமையானும், |