பக்கம் எண் :

118இலக்கணக் கொத்து 

என்ப ஆதலின், நல்லோர்க்குப் பணிதலும் அல்லோர்க்குப் பணியாமையுமே விரதமாகும் என்பது ‘ஒழுகி’ என்ற சொல்லின் நயப்பொருள், பசு பால் கொடுப்பதும் பாம்பு விடம் கொடுப்பதும் தவறினும், நல்லோர் உதவி செய்தலினும் அல்லோர் தீங்கு செய்தலினும் தவறார் என்பது தோன்றக் கொடுத்திடுவர் என்றார்.

நல்லோர்க்குக் கல்வி கற்பித்தல் மரபாகும்; அல்லோர்க்குக் கல்வி கற்பித்தல் வழக்காகுமா? ஆகாது என்று பொருள் செய்க.

பலராவர் நன்னூலார், தொல்காப்பிய எழுத்ததிகார உரையாசிரியர்கள், மாறனலங்கார ஆசிரியர், இலக்கண விளக்க ஆசிரியர் முதலாயினார்.]

இந்நூலியற்றியதன் காரணமும் இதற்கு அதிகாரிகளும்

11முற்கா லத்துப் போதகா சிரியர்
மொழிகுவர் மறையார் அருமையாம் விதிகளை
வழிவழி நின்ற வழங்கற் பொருட்டே;
இக்கா லத்தார் என்பயன் நினைந்தோ
இசையார் தாமும், இசையார் பூமியில்;
இங்ஙனம் ஆதலின் இறக்கும்என்று எண்ணி
அவைகளைத் திரட்டி அமைத்தனன் அன்றி
நூல்இலை என்று நுவன்றனன் அன்றே;
ஆகையால் பலநூல் ஆய்ந்தார் நோக்குக;
ஏனையோர் நோக்கின்ஓர் எள்அளவு ஆயினும்
பயன்படல் இலையே பலியாது இடமே.
 

இஃது உணர்வோர்க்கும் உணர்த்துவோர்க்கும் பொதுவாக ஒரு கருவி கூறுகின்றது. கூரியராயின் எளிய விதிகளை ஒருவர் உணர்த்தாமலும் உணர்வர். அரியவிதி அங்ஙனம் அன்று என்பது தோன்ற, இறந்தது தழீஇய எச்சத்திற்கும் உயர்வு சிறப்பிற்கும் பொதுவாகிய உம்மையை விரித்து ‘விதிகளையும்’ என்றிலம். பேரறிவோர் தமக்கும் தம்மைப் பொருள் என்று கொண்ட மாணாக்கர்க்கும் பயன்படுதலைச் சிறிதாயினும்நோக்கார், இறவாது நிலைநிற்றல் ஒன்றனையே பயனாக நோக்குவர் என்பது தோன்றத் தேற்றம் கொடுத்துப் ‘பொருட்டே’ என்றாம்.