பக்கம் எண் :

120இலக்கணக் கொத்து 

அறிவுறுத்தினும் அவற்றின் வழி இறங்கார் என்னும் கருத்தாலும், முப்பொருள் தோன்றத் ‘தாமும் இசையார்’ எனப்பட்டது. ஆதலின் அரிய விதிகள் வழக்கிறந்துவிடும் என்னும் கருத்தான் அவைகளைத் திரட்டிப் பல நூல்களின் பல செய்திகளின் தொகுப்பாக இந்நூல் அமைக்கப்பட்டது என்க. எனவே, பல நூல்களையும் ஆராய்ந்தவர்களே இந்நூற்செய்திகளின் நுட்பங்களைக் காணும் வாய்ப்பு உடையோராவர். ஏனையோருக்கு இந்நூல் எள்ளளவேனும் பயன்படாது.

அருமையாம் விதிகளையும் என உம்மை விரித்தல்வேண்டா என்பது விளக்கப்பட்டது. ‘பொருட்டே’ என்ற தேற்றம் வழக்கொழிதல் கூடாது என்பதன் இன்றியமையாமையை வலியுறுத்துகிறது. பாடம் சொல்லுதலில் மனம் பொருந்தாத இக்காலத்துப் போதகாசிரியர்களை அவர்கள் சிறப்புப் பெயர்களை நீக்கி ‘இக்காலத்தார்’ என்றார். இக்காலத்தார் அருமையாம் விதிகளை இசையார், தாமும் இசையார் என்ற சொற்றொடரின் கருத்து நன்கு விளக்கப்பட்டுள்ளது. தாமும் - உம்மை எச்ச உம்மையும், இழிவு சிறப்பு உம்மையுமாம்.

‘வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்
வேம்பும் கடுவும் போல வெஞ்சொல்
தாங்குதல் இன்றி வழிநனி பயக்கும் என்று
ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே’                          -தொ.பொ. 424

‘செவியுறை தானே
பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண்
அவிதல் கடன்எனச் செவியுறுத் தன்றே’                              -தொ.426

என்ற நூற்பாக்களான், சான்றோர் நல்லுரைகளாகிய வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ என்பனவற்றின் இலக்கணம் உணரப்படும்.

பல நூற்செய்திகளும் திரட்டிக் கூறப்பட்டுள்ள இந்நூல் ஒரு நூல் அன்று என்பதும் பல நூல்களையும் ஆய்ந்து ஐயந்திரிபு கொண்டவழி அவற்றைப் போக்குதற்கே இந்நூல் பயன்படும்