பக்கம் எண் :

282இலக்கணக் கொத்து 

[வி-ரை: தொல்காப்பியர் ‘மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் (தொ. எ. 46) என்றாரன்றி அகரத்தைச் சாரியையாகக் கூறாது ‘காரமும் கரமும் கானொடு சிவணி - நேரத் தோன்றும் எழுத்தின் சாரியை’ (தொ. எ. 134) எனக் காரம் முதலிய மூன்றனையே எழுத்தின் சாரியையாகக் கொண்டார். எழுத்தானது சாரியை பெற்றும் பெறாதும் கூறப்படும். ஆனால் மெய்கள் அகரம் பெற்றே குறிக்கப்பெறும். ஆதலின், அகரத்தை எழுத்துச்சாரியையோடு இணைக்கவில்லை. அகரம் மெய்யோடு நீங்காத் தொடர்புடைய சாரியை என்ற கருத்தான், தொல்காப்பிய நூற்பாவினையே எழுத்துச்சாரியை நூற்பாவோடு இணைத்து உரைத்தார் இலக்கணவிளக்கநூலார். (இ. வி. எ. 37) நன்னூலாரே ‘மெய்கள் அகரமும் நெட்டுயிர் காரமும்’ (ந. 126) என்ற மெய்கள் அகரச்சாரியை பெறுதலை ஏனைச்சாரியைகளோடு ஒப்பவைத்து உரைத்தார். மெய்கள் அகரச்சாரியை பெறுதற்கும் ஏனைய எழுத்துக்கள் காரம் கரம் கான் சாரியை பெறுதற்கும் இடையே உள்ள வேறுபாடு உணர்க. உயிர்மெய் நெட்டெழுத்துக்குச் சாரியை இன்று. முத்து வீரியம் உயிர்மெய் நெட்டெழுத்துக்கும் காரச்சாரியை புணர்த்துக் கூறும், (மூ. வீ. புணரியல். நூற்பா 51 முதலிய)

2. அகரம், ஆகாரம், அஃகான் என்புழி ஓரெழுத்திற்கே பல சாரியை வந்தன.

3. அகாரம், ஆகாரம், ஐகாரம் என்புழிப் பல எழுத்திற்கே ஒரு சாரியை வந்தது.

4. அஆகாரம், இஈகாரம் என்புழித் தொடர்ந்த பல எழுத்திற்கே ஒரு சாரியை வந்தது.

5. ‘அம்முன் இகரம்’ - (ந. 125) என்புழி ‘அ’ என்னும் எழுத்து சாரியை இன்றித் தனித்து வந்தது.

6. ‘அ இ உ-முதல் தனிவரின் சுட்டே’                                 - ந. 66

என்புழிச் சாரியை இன்றித் தொடர்ந்து வந்தது.