7. இனி, பதத்தோடு விகுதி முதலிய பொருந்தும் பொருத்தமில் புணர்ச்சி வருமாறு: கொடிச்சேவலான், செய்த வேள்வியன், கொண்டபகைவன், உடை மாவுரியான் - இவைபோல்வன எல்லாம் சேவற் கொடியான், வேள்வி செய்தவன், பகை கொண்டவன், மரவுரியுடையான் என்று விகுதி பொருந்தலே முறை என்க. ‘செல்வத்துள் எல்லாம் தலை’ - கு. 411 ‘நடுவூருள் நச்சுமரம்’ - கு. 1008 இவை போல்வன எல்லாம், செல்வம் எல்லாவற்றுள் - ஊர் நடுவுள் என்று உருபு பொருந்தலே முறை என்க. ‘புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே’ - தொ. எ. 35 ‘சாத்தன் வருதற்கு உரியனும் ஆவன்’ இவைபோல்வன எல்லாம் புணரியல் நிலையிடையும் குறுகல் உரித்து, சாத்தன் வருதற்கும் உரியனாவன் என்று உம்மை பொருந்தலே முறை என்க. ‘முதல்’ என்றதனால், ஒன்றினை உணர்ந்தான் - இரண்டினை இழந்தான் - இவை போல்வன எல்லாம் அன்சாரியை பெறுதலே முறை என்க. [வி-ரை: ‘‘தூரான்வயச் சொல்லாவது - ஆற்றொழுக்கும் அடிமறிமாற்றும் அல்லாத ‘சுரையாழ அம்மி மிதப்ப’ ‘நல்ல படாஅ பறை’ - (கு. 1115) முதலிய எழுவகைப் பொருள்கோள் இலக்கணம் பெற்ற செய்யுட்கள். மரூஉத் தொகையாவது - முன்மாலை, பின்மாலை, அரைக்காசு என்பன. கட்டிய சொல்லாவது - முயற்கோடு, கூர்மரோம கம்பலம், காதல ரோமபாசம், துன்னுசிக்குடர் என்ப. |