‘திணையும் பாலும் காலமும் இடனும் தோற்றும் தொழிற்சொல் படுத்தல் ஓசைப்பட்டு நின்றால் தொழிற்பெயராய் நின்று பயனிலை கொண்டும் உருபு ஏற்றும் காலத்தைத் தோற்றுவிக்கும்’ - தொ. சொ. 71. நச். ‘உண்டான், தின்றான் என்னும் தொடக்கத்துப் படுத்துச் சொல்லப்படும் தொழிற்பெயராகிய கிருத்தை எடுத்தும், வினை முற்றாகிய திஙந்தத்தைப் படுத்தும் கூறுக.’ -பி.வி. 40 உரை இவற்றால் எடுத்தல் படுத்தல் பற்றிய செய்தியில் இவ்வாசிரியர் மற்றவரோடு ஒருபுடை ஒத்தும் ஒருபுடை ஒவ்வாதும் கருத்துக் கொண்டுள்ளமை தேற்றம். குழல்வளர்முல்லை - வேய்ங்குழலிலிருந்து வெளிப்படும் முல்லைப்பண், கூந்தலில் சூடப்பட்டுள்ள முல்லை மலர் என இரு பொருள் பட்டமை காண்க. ‘‘குழல்வளர் - - வாய்வைத்து ஊத - சிலப். 4-15,16 எனச் சொல் வேறுபடாது பொருள் வேறுபட்ட சரூபம்வந்தவாறு காண்க. அஃது இஃது உஃது என்னும் சுட்டு முதலாகிய ஆய்தக் குற்றுகரமும், அது இது உது என்னும் முற்றுகரமும் பொருட் புணர்ச்சிக்கண் உயிரோடு புணருங்கால் அஃதழகியதுஇஃதழகியது உஃதழகியது என நிற்கும். அஃது, இஃது, உஃது என்னும் குற்றுகரமும், அது இது உது என்னும் முற்றுகரமும் உருபு புணருங்கால், அன்சாரியை பெற்றும் ஆய்தம் கெட்டும் உருபு ஏறியும் அதனை இதனை உதனை என நிற்கும். இவை பொருள் வேறுபடாது சொல் வேறுபட்ட சரூபம், ஈண்டும் எடுத்தல் படுத்தல் கொள்க. செம்பொன்பதின்பலம், குன்றேறாமா, குறும்பரம்பு, நாடியது, எட்டியாது, எட்டு, கொட்டு, தாமரை - இவை சொல்லும் பொருளும் வேறுபட்ட சரூபம், ஈண்டும் எடுத்தல் படுத்தல் கொள்க.’’ - பி.வி. 40 உரை |