| பாயிரவியல் - நூற்பா எண். 7 | 103 |
பட்டினத்துப்பிள்ளையார்பாடல் முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணாது, நன்னூல், சின்னூல், அகப்பொருள், காரிகை, அலங்காரம் முதலிய இலக்கணங்களையும், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, இராமன் கதை, நளன் கதை அரிச்சந்திரன் கதை முதலிய இலக்கியங்களையும் ஒரு பொருளாக எண்ணி வாணாள் வீணாள் கழிப்பர். அவர் இவைகள் இருக்கவே அவைகளை விரும்புதல் என்னெனின், பாற்கடலுள் பிறந்து அதனுள் வாழும் மீன்கள் அப்பாலை விரும்பாது வேறு பலவற்றை விரும்புதல்போல, அவரது இயற்கை என்க. ஓரிடத்துக்கூறி அமையாது பலவிடத்தும் கூறும் என்பது தோன்ற, ‘ஆண்டினும் இலையேல்’ என்றாம். இம்மூன்றனுள் வடமொழி வழக்குப்பற்றிக் கிடந்தன எல்லாம் தமிழர்க்கு ஒளிக்கும் என்பது தோன்ற, ‘வெளிபெற’ என்றாம். விரும்பினும் தமிழ் கொடாத விதிகளைத் தானே கொடுக்கும் என்பது தோன்ற ‘வழங்கும்’ என்றாம். [வி-ரை: பலகாலும் தமிழ் நூல்களோடு பழகிய பின்னரும் தெரியாத செய்திகள் உளவாயின் அவை தொல்காப்பியம், திருக்குறள், திருக்கோவையார் என்ற மூன்று நூல்களிலும் பரந்து காணப்படும். அவற்றுள் தமிழ்விதிக்கு அடங்கா வடமொழி வழக்குக்கள் சில உள. தமிழ் ஒன்றே வல்லவர் அவற்றைப் பிரித்து உணர்தல் இயலாது. அரிதின் முயலினும் தமிழ்விதி கொண்டு அறிதல் இயலாத அவற்றை வடமொழி மிக எளிதாக விளக்கிக் கூறும் என்றவாறு. ‘ஒருகுறி கேட்போன் இருகால் கேட்பின் பெருக நூலில் பிழைபாடு இலனே’ - ந. 42 ‘முக்கால் கேட்பின் முறைஅறிந்து உரைக்கும்’ - ந. 43 ‘ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் கால்கூறு அல்லது பற்றலன் ஆகும்’ - ந. 44 ‘அவ்வினை யாளரொடு பயில்வகை ஒருகால் செவ்விதின் உரைப்ப அவ்விரு காலும் மையறு புலமை மாண்பு உடைத்து ஆகும்’ - ந. 45 என்ற நூற்பாக்களில், புலமை நிரம்புதற்குரிய கருவிகள் கூறப்பட்டுள்ளன. |