[வி-ரை: ஒற்றுமைக்குறை, வேற்றுமைக்குறை என ஆறாவது இரு பெரிய பகுப்புக்களை உடையது. ஒற்றுமைக்குறைக் கண் உட்பகுப்புக்கள் இல்லை. வேற்றுமைக்குறை ஒன்றாய்த் தோன்றல் - உரிமையாய்த் தோன்றல் - வேறாய்த்தோன்றல் என்ற மூன்று உட்பிரிவுகளை உடையது. அவற்றுள், ஒன்றாய்த் தோன்றல் ஒன்றன்கூட்டத் தற்கிழமை - பலவின்ஈட்டத் தற்கிழமை - திரிபின்ஆக்கத் தற்கிழமை - சினைத்தற்கிழமை - குணத்தற்கிழமை - தொழில்தற்கிழமை என அறுவகைப்படும். உரிமையாய்த் தோன்றும் பிறிதின்கிழமை - பொருட் பிறிதின் கிழமை - இடப் பிறிதின் கிழமை - ஒருவரைப்பற்றி இயற்றிய நூல் பற்றிய பிறிதின் கிழமை காலப் பிறிதின் கிழமை ஒருவர் இயற்றிய நூல் பற்றிய பிறிதின் கிழமை என ஐவகைப்படும். வேறாய்த் தோன்றும் பிறிதின் கிழமை கை மாறும் பொருள்கள் பலவும் பற்றிப் பல வகைப்படும். வீரசோழியத்துள் ஆறாம் வேற்றுமை பற்றிய விரிவான செய்தி எதுவும் இல்லை. பிரயோக விவேகம் ‘சம்பந்த சட்டியிலே அபேதம் ஒருவகையேயாம், பேதசட்டி - சமவாய சம்பந்தம், சையோக சம்பந்தம், சரூப சம்பந்தம் என மூவகையாம். சமவாய சம்பந்தம் சினைகுணம் தொழில் சாதி விகாரம் என ஐந்தாகும். சையோக சம்பந்தம் பொருள் இடம் காலம் என மூவகைப்படும். இவை இரண்டும் அல்லாச் சரூபம் யாதாயினும் ஒரு நிமித்தமாகும்’ என்று 17 ஆம் காரிகையுரையுள் குறிப்பிட்டுள்ளது பெரும்பாலும் இலக்கணக் கொத்தின் கருத்தை ஒத்ததாகும்.] எ-டு: என்உயிர், இராகுத்தலை - இவை ஒற்றுமை. (தானும் உயிரும் வேறல்ல; இராகுவும் தலையும் ஒரே பொருளைக் குறிப்பன. இரு சொற்களும் ஒரே பொருளைக் குறித்தலின் ஒற்றுமைக்கிழமை எனப்பட்டன.] எள்ளை குப்பை - ஒன்றன் கூட்டம்; படையது குழாம் - பலவின் ஈட்டம்; கோட்டது நூறு - திரிபின் ஆக்கம்; சாத்தனது கண் - உறுப்பு; நிலத்தது அகலம் - பண்பு; சாத்தனது வரவு - தொழில்; - என ஒன்றாய்த் தோன்றல் வகை ஆறும் முறையே காண்க. |