பக்கம் எண் :

 பாயிரவியல் - நூற்பா எண். 669

நெடில்தொடர்க் குற்றுகரம் என்பது நெடில்தொடர்க் குற்றுகர ஈற்றுச் சொற்களாகிய நாகு, காசு போல்வன. அச் சொற்கள் எழுத்ததிகாரத்துள் இரண்டு எழுத்துக்களாகக் கணக்கிடப்படுவன. ‘சீரும்தளையும் சிதையின் சிறிய இஉ அளபோடு - ஆரும் அறிவர் அலகு பெறாமை’ (யா. கா. ஓ. 1) என்பது யாப்பிலக்கண விதியாதலின், சீரும் தளையும் சிதையுமிடத்துக் குற்றுகரம் கணக்கிடப்படாதாகவே, நெடில் தொடர்க் குற்றுகரச்சொல் ஒரே அசையாகக் கணக்கிடப்படும் செய்தி எழுத்திலக்கண விதியை யாப்பிலக்கணவிதி விலக்கியதற்கு எடுத்துக்காட்டு.

‘பால்மொழி’ - உவமத்தொகை, பால்போலும் மொழி - உவமவிரி. இது சொல்லதிகாரச் செய்தி. உவமையின் இனிமை என்ற பொதுத்தன்மையும் வெளிப்படப் ‘பால்போலும் இனிய மொழி’ என்று கூறுதலே விரி உவமை; ‘பால்போலும் மொழி’ என்பது தொகைஉவமை என்பதே அணியிலக்கணச் செய்தி. இது சொல்லதிகாரச் செய்தியை அணியதிகாரம் விலக்கியதற்கு எடுத்துக்காட்டு.

தூதுவிடாமை நோக்கித் தோழியொடு புலந்து உரைக்கும் தலைவி, ‘இன்பம் செய்தற்குரிய நட்பின்கண்ணே துன்ப வரவினைச் செய்யவல்லவர், துன்பம் செய்தற்குரிய பகைமைக்கண் என் செய்வர் கொல்லோ?’ என்று கூறுவதாகப் பொருள்படும் ‘துப்பின் எவனாவர்’ என்ற குறட்பாவில், சொற்களும் எதுவும் மறைந்திலாமையால் சொல்லினுள் வெளிப்படை. ஆனால், தலைவி தன் தோழி நட்பை விடுத்துத் துயரஞ் செய்யும் பிறளாயினள் என்று கருதியமை அகப்பொருளினுள் குறிப்பு.

‘சக்கரம் வலிய நெடிய தேர்கள் நிலத்தின்கண் அன்றிக் கடற்கண் ஓடா; அதுபோலக் கடற்கண் ஓடும் நாவாயும் நிலத்தின்கண் ஓடா’ என்று பொருள்படும் ‘கடல்ஓடா’ என்ற குறளில் சொற்கள் வெளிப்படையாக உள்ளன. ஆனால், ‘பகைவரை அவர் நிற்கும் நிலன்அறிந்து அதற்கேற்ற கருவியால் வெல்க’ என்று குறிப்பால் பெறப்படுத்தப்படுதலின், புறப்பொருளினுள் குறிப்பு. இவ்விரண்டு பாடல்களும் சொல்லதிகாரச் செய்தியைப் பொருளதிகாரச் செய்தி விலக்கியமைக்கு எடுத்துக்காட்டு.