இவ்வாறு ஓரதிகாரச் செய்தி பிறிது ஓர் அதிகாரச் செய்தியால் விலக்கப்படுதல் இலக்கண நூல்களில் மிகுதியாகக் காணப்படும் என்பது.] ஒவ்வொரு நூற்கடல் அகப்பொருள் விளக்கம், யாப்பருங்கலக்காரிகை, தண்டி யலங்காரம் முதலிய நூல்கள் ஒன்றனையே உணர்த்தும்; நன்னூல், சின்னூல் முதலிய நூல்கள் இரண்டனையே உணர்த்தும்; அவை போலன்றித் தொல்காப்பியம் ஐந்தனையும் உணர்த்தலின் ‘கடல்’ என்றாம். அகத்தியம், அவிநயம் முதலாயினவும் அதுவாதலால் ‘ஒவ்வொருநூல்’ என்றாம். [வி-ரை: அகப்பொருள் விளக்கம் - அகப்பொருள் நூல். யாப்பருங்கலக் காரிகை - யாப்புநூல். தண்டியலங்காரம் - அணிநூல். நன்னூல், சின்னூல் - எழுத்து, சொல் என்ற இரண்டனை மாத்திரம் நுவலும் நூல்கள். தொல்காப்பியம் எழுத்து - சொல் - பொருள் என்ற மூன்றே பகுப்புடையதாயினும், பொருட்பகுப்பினுள் செய்யுளியல் யாப்பினையும் உவமவியல் அணியினையும் விளக்குதலின், தொல்காப்பியம் எழுத்து - சொல் - பொருள் - யாப்பு - அணி என்ற ஐந்திலக்கணம் நுவலும் நூல் எனப்பட்டது. தொல்காப்பியக் காலத்தில் யாப்பும் அணியும் பொருளதிகாரக் கூறுகளாகவே இருந்து பின்னர்த் தனித்தனி விரிந்தவாகும். அகத்தியம், அவிநயம் என்ற நூல்கள் இக்காலத்து வழக்கில் இல்லை. அகத்திய நூற்பாக்கள் என்பவை மிக அருகியே காணப்படுகின்றன. அவிநயநூலின் யாப்புப் பற்றிய நூற்பாக்களே பலவாகக் காணப்படுகின்றது.] 4 | ஓரதி காரத்தின் உள்ளே ஓரின் ஓர்இயல் விதியினை ஓர்இயல் ஒழிக்கும் |
|