பக்கம் எண் :

 பாயிரவியல் - நூற்பா எண். 671

‘இடைஉரி, தழுவுதொடர் அடுக்குஎன ஈரேழே’                           ந. 152

‘உருபுகள் புணர்ச்சியின்,
ஒக்கும்மன் அப்பெயர் வேற்றுமைப் புணர்ப்பே’                          ந. 242

இவை ஓரியலோடு ஓரியல் மாறுபாடு.

[வி-ரை: ஒரே அதிகாரத்தினுள் ஓரியலில் விதிக்கப்பட்ட செய்தியைப் பிறிது ஓரியல் ஒழிக்கும். நன்னூல் எழுத்ததிகாரத்தில், உயிரீற்றுப் புணரியலில் இடைச்சொல்தொடர் அல்வழிப்புணர்ச்சி என்று கூறப்பட்டிருக்கவும், உருபுபுணரியலில் இடைச்சொல்லாகிய வேற்றுமைஉருபு பெயரோடு கூடும் புணர்ச்சி வேற்றுமைப்புணர்ச்சி என்று கூறப்பட்டிருக்கும் செய்தி ஓரியல் விதியினைப் பிறிதோரியல் விதி விலக்கியமைக்கு எடுத்துக்காட்டு.]

5ஓர்இயல் அதனின் உள்ளே ஓரின்
ஒருசூத் திரவிதி ஒருசூத் திரவிதி
தன்னைத் தடுத்துத் தள்ளும்.

‘ணனவல் லினம்வரட்ட-றவும் பிறவரின்
இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு’                                        ந. 209

‘சாதி குழூஉபரண் கவண்பெயர் இறுதி
இயல்பாம் வேற்றுமைக்கு’                                              ந. 211

இவை ஓரியலுள் ஒரு சூத்திரத்தை மற்றொரு சூத்திரம் தள்ளுதல்

[வி-ரை வேற்றுமைப் புணர்ச்சியில் நிலைமொழியீற்றில் ணகரமோ னகரமோ இருக்கவும், வருமொழி முதலில் வல்லினம் வந்தால் ணகரம் டகரமாகவும், னகரம்றகரமாகவும் திரியும் என்ற நன்னூல் மெய்யீற்றுப் புணரியலில் உள்ள பொதுவிதியை, பாண் உமண் முதலிய சாதிப் பெயர்களும், அமண் முதலிய குழூஉப் பெயர்களும் பரண் கவண் என்றபெயர்களும் வருமொழிவல்லினம் வரினும் வேற்றுமைப் பொருட்கண் இயல்பாகவே புணரும் என்ற மெய்யீற்றுப் புணரியல் சிறப்பு விதி விலக்கியமை, ஓரியலின் ஒரு சூத்திரவிதியை அவ்வியலின் மற்றொரு சூத்திரவிதி விலக்கியமைக்கு எடுத்துக்காட்டு.]