பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்179

 

பிற தலங்களையும் வணங்கிச் சென்றமை முன்னர்க் காண்க. 228 - 236 - 237 - பார்க்க.

மேவினர் சென்று - மேவினர் - மேவினராகி - முற்றெச்சம். "நம்பு மேவு நசையா கும்மே" (தொல் - சொல் - 329) என்றபடி, மேவு - விருப்பம் - ஆசை.

விரும்பிய சொன்மலர் - தாம் விரும்பிய என்றும், இறைவர் விரும்பிய என்றும், உலகம் எல்லாம் விரும்பிய என்றும் உரைக்க நின்றது. இக்காலத்து அவை கிடைக்கப் பெறாமையும் விரும்பிய என்ற இறந்த காலத்தாற் குறிக்கப்படுதல் காண்க.

பூ அலர் சோலை மணம் அடி புல்ல - வழியிடை மலர்ச் சோலைகள் பலவற்றையும் கடந்து சென்றனர் என்பதும், அவ்வாறு நடந்து சென்றபோது, சோலைஅலர் பூக்களைச் சொரிய அவற்றின் மணம் அவரது திருவடிகளிற் பொருந்தியது என்பதுமாம். பூக்களின் மணம் இவரது திருவடி தீண்டிப் பேறுபெற எண்ணியது போலப் புல்ல என்றதொரு தற்குறிப்பேற்ற அணிநயமும் காண்க.

பொருண்மொழியின் காவலர் - பொருள் - மெய்ப்பொருள். பொருள் மொழி - மெய்ப்பொருளைத் தரும் சொல். "கோதின்மொழிக் கொற்றவனார்" "வீட்டுக்கு வாயி லெனுந்தொடை" முதலியவை காண்க.

செல்வத் திருக்கெடிலம் - செல்வமாவது கங்கையே போலச் சைவ மெய்த் திருவை ஆக்கும் தன்மை. 235 பார்க்க. "செல்வப் புனற்கெடிலம்" (காப்புத் திருத்தாண்டகம்) என்றது காண்க.

திருநகரும் - மலரடிபுல்ல - என்பனவும் பாடங்கள்.

136

1402.

வெஞ்சமண் குண்டர்கள் செயவித்த தீய மிறைகளெல்லாம்
எஞ்சவென் றேறிய வின்றமி ழீச ரெழுந்தருள
மஞ்சிவர் மாடத் திருவதி கைப்பதி வாணரெல்லாந்
தஞ்செயல் பொங்கத் தழங்கொலி மங்கலஞ் சாற்றலுற்றார்.

137

(இ-ள்.) வெளிப்படை. கொடிய சமண்கையர்கள் செய்வித்த தீயனவாகிய கொடுஞ் செயல்கள் எல்லாம் ஒழிய, வெற்றிகொண்டு மேலேறி வந்த இனிய தமிழரசர் இவ்வாறு எழுந்தருளவே, மேகந் தவழும்படி உயர்ந்த மாடங்களையுடைய திருவதிகை நகரில் வாழ்கின்றவர்கள் எல்லாரும் தாங்கள் எதிர்கொண்டு வரவேற்கும் உபசரிப்பாகிய செயல்கள் சிறக்கும்படி, முழங்குகின்ற முரசு முதலிய இயங்களை முழக்கி, இந்த மங்கலச் செய்தியை ஊரெல்லாம் அறியச் சாற்றினார்கள்.

(வி-ரை.) செய்வித்த - அரசனுத்தரவினாற் செய்யும்படி செய்த. தாமே நேரிற் செய்யலாற்றாது அரசனை மயக்கிச் செய்வித்த எனப் பிறவினையாற் கூறினார். அரசன் உத்தரவினால் அவை நிகழ்ந்தனவாயினும் பழியும் கொடுமையும் சமணர்கள் பாலதே என்பார், அரசன் செய்த என்னாது, வெஞ்சமண்குண்டர்கள் செய்வித்த என்றார்.

தீய மிறை - கொடிய துன்பங்கள் - மீறை - தகாதவழியால் நேரும் துன்பம் "பெருமிறை தானே தனக்கு" (குறள்).

எஞ்ச - அற்றொழிய, "வழியெஞ்ச லெஞ்ஞான்று மில்" (குறள்.) "எஞ்சும் வகை" (1372.)

வென்று - வெல்லுதல் இங்குப் பகைவரது செயல்களின் கொடுமை தம்மைச் சிறிதும் அணுகாமற் செய்தல் குறித்தது. ஏறிய - கடந்த - பகைக்கடல் கடந்து போந்த. கரையேறிய என்ற குறிப்புமாம்.