போல; சேவுகைத்தவர்....வணங்க - இடபத்தைக் கொடியாக உயர்த்த சிவபெருமானால் ஆட்கொள்ளப்பெற்ற திருநாவுக்கரசருடைய செம்மை யுடைய மலர் போன்ற திருவடிகளில் வணங்க; கண்டு - அதனைக் கண்டு; புனித நீறு அன்றே அளித்தார் - திருநாவுச்கரசர் புனிதத் திருநீற்றினை அன்றே அளித்தனர். 36 இந்த நான்கு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன. 1817 - 1818 திருப்பாட்டுக்கள் முன் பாட்டுக்களுடன் பொருட்டொடர்பும் சொற் றொடர்பும் கொண்டு விரைந்து தொடரும் ஒரு செயல் முடிபாகக்கொள்ள நின்றமையின் அவ்வாறு ஒரு முடிபாக்கி உரைக்கப்பட்டன. இவையிரண்டினையும் இவ்வாறன்றித் தனி வினை முடிபாகவே கொண்டுரைப்பினு மிழுக்கில்லை. இவற்றின் பொருளனைத்தையும் திருநாவுக்கரசர் புரணாத்தினுள் (1473) ஒரே பாட்டில் ஒரே முடிபாக வைத்துரைத்தமையும் காண்க. 1815. (வி-ரை.) அன்பர் - திருநாவுக்கரசர். அப்பூதியார் என்று கொண்டுரைத்தனர் முன் உரைகாரர்; அது பொருந்தாமை முன்னர் 1472-ஆம் திருப்பாட்டின் கீழ் விளக்கப்பட்டது. ஆண்டுக் கண்டு கொள்க. செவ்விய - திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட என்க. சிவத்தன்மையில் அடங்கி நிற்றலின் எதுவரினும் துளங்காது தம்நிலை திரியாமல் நிற்குமென்பதாம். ஓர் தடுமாற்றம் திரு அருளால் சேர - என்க. தடுமாற்றமாவது நிலை கலங்கும் உள்ள நிகழ்ச்சி. ஓர் - ஓர்வதற் கேதுவரகிய. ஒரு என்றலுமாம். சேர - முன் இல்லாது உரை கேட்ட அப்போதே வந்துகூட. நோக்குதல் - கருதுதல். தடுமாற்றத்தின் விளைவினை அரசுகள் கூறுவது, தாமறிந்தவாறு அன்பின் பெருமையுடைய அப்பூதியார், கேட்கப்பொறா உரைகூறும் காரணம் யாது என்ற குறிப்புடையதாம். என் உள்ளம் இவ்வுரை பொறாது - அடியார்பால் அருட்பூதி பெறுதற்கு அனைவரும் முந்துகின்ற இச்சமயம் அவன்தானே முன்னிற்க வேண்டியவனாயிருந்தும், அரசுகள் "பூதி சாத்த அவனையும் காட்டுக" என்று தாமாகக் கேட்டருளிய போதும்; "இங்கு இப்போது அவன் உதவான்" என்றவுரை கேட்க உள்ளம் பொறாதாயிற்று. என் செய்தான் - பூதி சாத்த உதவாமைக்குத் தக்க குறையாக என் செய்தான் என்க. இதற்கு "ஒன்று" உண்டால் - இதற்கு - இவ்வாறு வாராமைக்கு. ஒன்று. ஏதோ ஒரு மறைவாகிய காரணம். உண்டால் - உண்டென்பது துணிபு. இதற்கு "ஒன்று" உண்டு - "இதற்குத் தீர்வாகத் திருவருள் ஒன்றும், ‘ஒன்று கொலாம்' என்ற மந்திர உருவாகிய திருப்பதிகமும் உறுதியாக உண்டு; நீர் அஞ்சவேண்டா" என்ற பிற்சரித விளைவின் உண்மைக் குறிப்பும்பட நின்றது காண்க. மெய்விரித்து உரையும் - நீர் முன் உரைத்தது மெய்யே; ஆயினும் அது மறையாக இருத்தலின் அதனை விரித்துக் கூறுவீராக. மெய் உரையும் என்னாது விரித்துரையும் என்றதனால் அப்பூதியாரது வாய்மை தவறாத வேத வொழுக்கம் அரசுகளால் போற்றப்பட்டது காண்க. விதிர்ப்பு - உடல் நடுக்கமும் மன நடுக்கமும். அஞ்சி - அச்சத்தின் காரணம் "இதற்கு பெரியவர் அமுது செய்யும் பேறு பிழைத்துவிடுமோ?" என்பது என மேல்வரும் பாட்டிற் கூறுதல் காண்க. 33 |