பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்151

 

மெரித்த குறைக்கொள்ளிகள் விளக்காக. "பேயுயர் கொள்ளி கைவிளக்காப் பெருமானார், தீயுகந் தாட றிருக்குறிப் பாயிற் றாகாதே" (குறிஞ்சி - திருச்சிராப்பள்ளி - 7); அரங்கிடை.......கூத்தும் - பசுஞான பாசஞானங்களா லறியப்படாதவன். "உலகெலா முணர்ந்தோ தற்கரியவன்" (புரா), "உணர்ந்தார்க் குணர்வரியோன்" (திருக்கோவை).- (7) விலைபெறு - விலையில் - முரண் அணி. இரண்டும் ஒரு பொருள் தந்து நின்றன. விலையில் - வேறு எவரும் கொள்ளாத என்பதும் குறிப்பு. கைக்கொண்ட - பங்குகொண்ட. ஒருபால் மலைமகளது கையினைக் கொண்ட என்றலுமாம். "விற்றாங் கியகரம் வேனெடுங் கண்ணிவியன்கரமே" (நாகை - திருவிருத் - 2); மணி - நீலமணிபோன்ற நிறம்.- (8) கருவி நாடற்கரியது - கருவி நூல்களால் அறியப்படாதது. கலைஞானத்தினுள் அடங்காதது.- (9) மரவத்துகில் - மரவுரி உடை. துகில்கிழி - துகிலினின்றும் கிழித்தெடுத்த. "கீறுகோவணம்" (525). கீளும் கோவணமுமாகக் கிழித்தெடுத்த. வேழமுரித்த நிலை - வேழத்தின் சினந்தணிப்பிக்க வேண்டி நாயனார் இறைவரை இந்நிலையினராகத் தெளிவுற்று எண்ணுகின்றமை குறிப்பு.- (10) உரங்கள் - வலிமைகள், எடுத்தான் - எடுத்தவனுடைய; ஒன்பதுமொன்றும் - பத்து வாய்களாலும்; அலற - முன்னர் அழுகையோசையும், பின்னர்ச் சாமகான ஒலியுமாகச் சத்திக்க. வரங்கள் - இரங்கி நாளும் வாளும் கொடுத்தமை.

1382.

தண்டமிழ் மாலைகள் பாடித் தம்பெரு மான்சர ணாகக்
கொண்ட கருத்தி னிருந்து குலாவிய வன்புறு கொள்கைத்
தொண்டரை முன்வல மாகச் சூழ்ந்தெதிர் தாழ்ந்து நிலத்தில்
எண்டிசையோர்களுங் காண விறைஞ்சி யெழுந்தது வேழம்.

117

(இ-ள்.) வெளிப்படை. குளிர்ந்த தமிழ்மாலைகளைப் பாடித் தமது பெருமானையே சரணமாகக்கொண்ட கருத்துடன் இருந்து விளங்கிய, அன்பு பொருந்திய கொள்கையுடைய திருத்தொண்டரை அவர் முன்பு வலமாகச் சுற்றி வந்து எதிரிற்றாழ்ந்து எல்லாத் திக்கிலுள்ளவர்களும் காணும்படி அந்த யானை நிலத்தில் வீழ்ந்து வணங்கி எழுந்தது.

(வி-ரை.) தண் தமிழ் மாலைகள் - தண் - தமிழ் எப்போதும் குளிர்ந்த நீர்மையுடையது என்றபடி. இயற்கை யடைமொழி. தட்பமாவது செவிக்கு இன்பந் தந்து அறிவும் தரும் தன்மையால், வேட்கையின் வெப்பந் தணிவித்தலும் உயிரின் பிறவி வெப்பத்தை மாற்றும் ஞானந்தரும் கருவியாதலுமாம். இது தமிழுக்குப் பொதுவாயினும் நாயன்மார்களது தமிழுக்குச் சிறப்பாயுரிய அடைமொழி. "ஞானத்தமிழ்" என்பது பிள்ளையார் திருவாக்கு. "தமிழ் மாருதம்" (313) என்றது காண்க. யானையின் சினமாகிய தீயைக் குளிரச்செய்த பயன் பற்றியும் இவ்வாறு கூறினார்.

மாலைகள் - திருப்பதிகத்தினுள் ஒவ்வொரு திருப்பாட்டும் தனித்தனி ஒவ்வோர் மாலையாம் என்பது. "செந்தமிழ்மாலை பத்திவை" (தக்கராகம் - கற்குடி - 11) ஆராத சொன்மாலைகள் பத்தும்" (தக்கராகம் - பனையூர் - 11) முதலிய ஆளுடைய பிள்ளையாரது ஆட்சிகள் காண்க.

பாடி - இருந்து - குலாவிய என்று கூட்டிக்கொள்க. தம்பெருமான் சரணாகக் கொண்ட கருத்தில் இருந்தது - பெருமானையே புகலாக. இரண்டனுருபும் தேற்றே காரமும் தொக்கன. பெருமான் சரண் ஆக - திருவடியின் தன்மை தமக்கு ஆக. சிவோகம் பாவனையினால் அவனே தானாக என்று உரைத்தலுமாம். கொண்ட கருத்தில் இருந்து என்பதும் இப்பொருளை வலியுறுத்தும். முன்னர்