பக்கம் எண் :


190திருத்தொண்டர் புராணம்

 

பலபாடி - அரியானை - எளியானை - அமுதைப் - பாடி - என்க. இந்த நாட்களில் நாயனார் பாடியருளிய பலவற்றுள் இப்போது கிடைப்பன பதின்மூன்று பதிகங்களாம். இவை - கெடிலவாணர் என்ற - காந்தார பஞ்சமப்பண் - பதிகமொன்றும், "கோணன் மதி" - "எட்டு நாண்மலர்" என்ற திருக்குறுந்தொகைப் பதிகங்க ளிரண்டும், "இரும்பு கொப்பளித்த", "வெண்ணிலா மதியம்", "நம்பனே யெங்கள் கோவே", "மடக்கினார் புலியின் றோலை", "முன்பெலாமிளைய காலம்" என்ற திருநேரிசைப்பதிகங்கள் ஐந்தும், "மாசிலொள்வாள் போல்" என்ற திருவிருத்த மொன்றும், அடையாளம் - போற்றி - திருவடி - காப்பு - என்ற திருத்தாண்டகங்கள் நான்குமாம்.

தலமுறை வகுப்பில் திருவதிகை வீரட்டானம் என்ற தலத்திற்கு நாயனாரது பதினாறு பதிகங்கள் மட்டும் தொகுக்கப்பட்டடுள்ளன. "நாமார்க்கும் குடியல்லோம்" என்ற திருத்தாண்டகப் பதிகம் திருவதிகையில் அருளிச் செய்யப்பட்டது. "மாசில்வீணை" என்ற பதிகம் பாடலிபுத்திர நகரில் நீற்றறையினுள்ளிருந்தும், "சொற்றுணை" என்ற பதிகம் பாடலிபுத்திரக்கரைக் கெதிரில் கடலினுள் இருந்தும் பாடப்பட்டன. அவ்வாறு தலங்குறிக்காது பாடப்பட்டமையால் அவை பொதுப்பதிகங்கள் என்ற தலைப்பின்கீழ்த் தொகுக்கப்பட்டடுள்ளன; ஆயினும் அக்காலத்தில் பாடப்பட்ட "சுண்ணவெண் சந்தனம்" என்ற பதிகம் போலவே, அவை - திருவதிகை வீரட்டானேசுவரராகிய திரிபுராந்தகேசுவரரையே பாடியனவாதலின், திருவதிகைத் தலைப்பில் தொகுக்கத்தக்கன. அவை பற்றி ஆங்காங்கு முன்னரே குறிக்கப்பட்டது. எஞ்சிய தலப்பதிகங்களுள், "கூற்றாயினவாறு", "சுண்ணவெண சந்தனச்சாந்தும்", "ஏழை"த் திருத்தாண்டகம் என்ற மூன்றும் முன்னர்க் குறிக்கப்பட்டன. ஆதலின் இங்குப் "பரிவுறுசெந்தமிழ்ப் பாட்டுப் பல" என்றவை முன் சொல்லியபடி இப்போது கிடைத்துள்ள பதின்மூன்று பதிகங்களேயாம்.

பணி செயுநாள் - பணி - உழவாரத்திருப்பணியாகிய கைத்தொண்டும் அழுந்தி நினைத்தலாகிய மனத்தொண்டும் ஆம். பாடுதலும் பணி செய்தலுமாகிய இவை நாயனார் செய்தனர் என்பது "என் கடன் பணிசெய்து கிடப்பதே" என்னும் நாயனார் திருவாக்கினா லறியப்படும். பாடிப் பணிசெயும் - பாடுதலாகிய பணி செய்கின்ற என்பாருமுண்டு.

பணிசெயு நாள் - பல்லவனும் அல்லல் ஒழிந்து - எய்தி - பணிந்து - நீத்து - விடையோன் - தாள் அடைந்தான் என்றுகூட்டி இந்த இரண்டு பாட்டுக்களையும் முடித்துக்கொள்க.

இத்தலத்தே மேற்கூறியபடி இரண்டாவது முறை எழுந்தருளிப் பல பதிகங்களையும் பாடிப் பணிசெய்து மற்றும் தலங்களைத் தரிசித்துத் தொண்டு செய்வதற்கு எழுந்தருளுவதனை 1412-ல் கூறுவார். அவ்வாறு சென்றபின் நாயனார் இத்தலத்திற்கு மீளவும் எழுந்தருளவில்லை. இது நாயனார் சரிதத்தின் சிறப்பியல்புகளுள் ஒன்று. ஆதலால் நாயனார் அருளிய இத்தலத்துக்குரிய மேற்கூறிய பதின்மூன்று திருப்பதிகங்களைப் பற்றியும் சிற்சில குறிப்புக்கள் இங்குத் தரப்படுகின்றன.

144

I திருச்சிற்றம்பலம்

காந்தாரபஞ்சமம் - "கெடிலவாணர்"

முளைக்கதி ரிளம்பிறை மூழ்க வெள்ளநீர்
வளைத்தெழு சடையினர் மழலை வீணையர்;
திளைத்ததோர் மான்மறிக் கையர் செய்யபொன்
கிளைத்துழித் தோன்றிடுங் கெடில வாணரே.

1

திருச்சிற்றம்பலம்