பக்கம் எண் :


306திருத்தொண்டர் புராணம்

 

இறுதியில், நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி, அண்ணலார் சேவடிக்கீ ழமர்ந்திருந்தும் முக்காலத்தும் பேறுபெறுகின்றமையால் மன்னு என்றும், முத்தியைத் தலைக்கூடச் செய்யும் தொண்டாதலின் திரு என்றும் கூறினார்.

எழும் பொழுதில் - எழுகின்ற அப்பொழுதே. "உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்" - இது திருவடி மலர் சூட்டியபோது தொண்டனார் கேட்க இறைவர் அருளிய திருவாக்கு.

சென்னிமிசைப் பாதமலர் சூட்டுதல் - திருவடி தீக்கை. இது ஞானதீக்கையின் பின் செய்யப்படும். இது சாம்பவீ தீக்கை எனவும். பெயர் பெறும் "சேவடிக்கணஞ் சென்னி மன்னித் திகழுமே" என்ற திருவாசகமும், திருவாத வூரடிகளுக்கு இறைவர் குருவடிவாக வந்து அவ்வாறு அருள் செய்ததும் காண்க. ஆளுடைய நம்பிகளை வலிய ஆட்கொண்ட திறத்துக்கேற்ப வலியத் திருவடி தீக்கை செய்த வரலாறும் (231 - 232 - 233) கருதுக.

"உன்னுடைய.....முடிக்கின்றோம்" என்று - என இறைவர் தம் அடியவரை ஒருமையிலும் தம்மைப் பன்மையிலும் வைத்துக் கூறினாராகவும், ஆசிரியர், நாயனாரை மன்னு திருத்தொண்டனார் - அவர்தம் எனப் பன்மையிலும், சூட்டினாள் சிவபெருமான் என இறைவரை ஒருமையிலும் வைத்தோதிய வகையால் அடியார் பெருமையினையும், சைவ சித்தாந்தத்தின் உயர்ந்த மரபினையும் விளக்கியவாறு கண்டுகொள்க. "இறைவன் தொண்டரு ளடக்கம் - தொண்டர் தம் பெருமையைச் சொல்லலு மரிதே" என்ற மூதுரையும் காண்க.

195

1461.

"நனைந்தனைய திருவடியென் றலைமேல்வைத் தா"ரென்று
 புனைந்ததிருத் தாண்டகத்தாற் போற்றிசைத்துப் புனிதரருள்
 நினைந்துருகி விழுந்தெழுந்து நிறைந்துமலர்ந் தொழியாத
 தனம்பெரிதும் பெற்றுவந்த வறியோன்போல் மனந்தழைத்தார்.

196

(இ-ள்.) வெளிப்படை. "நனைந்தனைய திருவடி என்தலைமேல் வைத்தார்" என்று தொடுத்த திருத்தாண்டகப் பதிகத்தால் துதிசெய்து, புனிதராகிய சிவபெருமான் தமக்குச் செய்த பேரருளை நினைந்து, உருகிக், கீழேவிழுந்து, பின் எழுந்து, மனநிறைவும் அகமலர்ச்சியும் பெற்றுக், குறையாத செல்வத்தைப் பெரிதும் பெற்றுக் களிக்கும் வறியவன்போல மனந்தழைத்தனர்.

(வி-ரை.) நனைந்தனைய திருவடி என் தலைமேல் வைத்தார் - இது தேவாரக் குறிப்பும் சொல்லும் பொருளுமாம்.

புனைந்த - புனைதல் - தொடுத்தல். "தமிழ்மொழி மாலை" (1458) என்றதற்கேற்ப புனைந்த என்றார்.

புனிதர் - இயல்பாகவே பாசங்களி னீங்கியவர். புனிதர் - புனிதஞ் செய்பவர் என்றலுமாம். இயல்பாகிய புனிதமுடையாரே புனிதஞ்செய்யு மாற்றலு முடையார்.

அருள் - தாம் வேண்டியதனை வேண்டியவாறே வேண்டியபொழுதே ஈந்த பேரருள்.

நினைந்து உருகி விழுந்து எழுந்து நிறைந்து மலர்ந்து - அருளை நினைத்தலும் அதனால் உருகுதலும் - முன்னர் மனத்துள் நிகழ்ந்த செயல்கள்; விழுதலும் பின் எழுதலும் அவ்வாறு உருகியதன் காரணமாக நிகழ்ந்த உடற்செயலாகிய புறத்து மெய்ப்பாடுகள்; நிறைதலும் மலர்தலும் பின்னர் நிகழ்ந்த உள்ளத்தின் நிகழ்ச்சிகள்; மலர்தல் உள்ளும் புறம்பும் கலந்த செயலெனினுமொக்கும். இவ்வாறு ஒவ்வொரு வினையெச்சத்தால் ஒவ்வொன்றாகத் தனிப்பெரு நிகழ்ச்சிகளைக் கூறிப் போந்த கவிநயம் காண்க.