பதிகக் குறிப்பு :- மறையணிநாவினான், மறப்பிலார் மனத்துளான், பலபல திறத்தினாலும் பேதனாய்த் தோன்றினான், குறவிதோள் மணந்த செல்வக் குமரவேள் தரதை, பிறவியை மாற்றுவான், முற்றிய ஞானத்தான், பிண்டமே யாயினான், என்றித் திறத்தனவாய்ப் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பேணினானை, உரைக்குமா றுரைக்குற்றேன்; உணருமா றுணர்த்துவேன்; இறைஞ்சுமா றிறைஞ்சுவேன்; நாடொறும் வணங்குவேன். பதிகப் பாட்டுக் குறிப்பு :- (!) பேணினான் - இத்தலத்துச் சுவாமியின் பெயர். ஆளுடைய பிள்ளையார் பதிகத்துட் "பிரியார்" என்பது காணக். - (2) பலபல திறத்தினாலும் பேதனாய்த் தோன்றினான் - சிருட்டியிற் காணும் பலபேதமும் தானேயாகி உள்ளவர். "அவையே தானயோய்" (சிவஞான போதம் - 2) "உலகெலாமாகி வேறாய்" (சித்தியார் - 2) உரைக்குமாறு - உரையளவில் என் உரையில் வரும் அளவில் - அமைவுபடா னாயினும். -(3) குறவி - வள்ளியம்மை. உறவு - அன்பு. உணருமாறு - உணர்தற் கெட்டானாயினும் அருள்கொண்டு உணரும் அளவு.- (4) மைஞ்ஞவில் - கைஞ்ஞலில் - பொய்ஞ்ஞெக - நகரம் ஞகரமாய் வந்த எழுத்துப் போலி. பொறி - அறிவுட்கொள்ளும் தன்மை. - (6) இறைஞ்சுமாறு - விதித்தபடி வணங்க. - (7) பிறரும் - புறம் - அகப்புறம் - என்ற சமயத்தவரும். அவர்கள் எத்தும்வகை மேல் 9-வது பாட்டில் அருளப்பட்டது. - (8) முற்றிய ஞானத்தான் - நிறைவாகிய பேரறிவுடையவன். நிறைந்த ஞானத்தில் வெளிப்படுபவன். பிண்டம் - உலகமாகிய உடல். - (9) விரிவிலா...பரிவினால் - சைவத்தின் நிறைந்த நிலை காட்டுவது இத்திருப்பாட்டு ஞானசாத்திரங்களுள் எடுத்தாளப்படுவது. விரிவிலா அறிவினர்கள் ஆதலின், என வேறு ஒருசமயம் செய்ததற்குக் காரணங்கூறியபடி. செய்து - தாமாகக்கட்டி. "பொய்யே கட்டி நடத்திய" (திருத்தொண்டர் புராண வரலாறு - 20). எரிவினால் - கோபம் முதலிய தாமதகுணங்களாற் றூண்டப்பட்டு. எம்பிராற்கு ஏற்றதாகும் பரிவினால் - எமது பெருமான் எங்கும் நிறைந்துள்ளாராதலின் அந்தப் பக்குவத்தினும் அமைந்து ஏற்றவாறு அருள்வர் என்ற அன்பினால். பெரியோர் - விரிவிலா அறிவினார்கள் போலல்லாது முதிர்ந்த ஞானமுடையோராய்ச் செயற்கரியவற்றையும் செய்வோர். - (10) உருகிய - அன்பினால் மனமுருகப் பெற்ற. தலவிசேடம் :- பெருவேளூர் - காவிரிக்குத் தென்கரையில் 92-வது தலம். ஐயன்பேட்டை என வழங்கப்படும். சுவாமி - பிரியாத நாதர் - பேணினார்; அம்மை - ஏலவார்குழலி. பதிகம் 2. குழிக்கரை என்ற புகைவண்டி நிலையத்தினின்றும் வடக்கே மட்சாலைவழி ஆற்றைப் பரிசினாற்கடந்து நான்கு நாழிகையளவில் உள்ள திருக்கண்ணமங்கையை அடைந்து, அங்குநின்றும் மேற்கில் ஒருநாளிகை யளவில் உள்ள திருக்கரவீரத்தினின்றும் வடமேற்கில் மட்சாலை வழி 1 நாழிகை யளவில் அடையத்தக்கது இத்தலம். சாத்தங்குடி - தேவார வைப்புத் தலங்களுள் ஒன்று; திருக்கரவீரத்தினின்றும் தெற்கில் நாழிகையில் மட்சாலை வழி யடையத்தக்கது. குறிப்பு :- இடைப்பட்ட தலங்களாக மேற் குறித்தவற்றுள் திருக்கரவீரம் முதலிய தலங்களுக்கு நாயனார் பதிகங்கள் கிடைத்தில; அவற்றின் குறிப்புக்கள் ஆளுடைய பிள்ளையார் புராணத்துட் காண்க. 1529. | மன்றல் விரவு மலர்ப்புன்னை மணஞ்சூழ் சோலை யுப்பளத்தின் முன்றி றோறுஞ்சிறுமடவார் முத்தங் கொழிக்கு மறைக்காட்டுக் குன்ற வில்லி யார்மகிழ்ந்த கோயில் புகுந்து வலங்கொண்டு சென்று சேர்ந்தார் தென்புகலிக் கோவு மரசுந் திருமுன்பு. |
264 |