துணிந்தவாறே திருநீற்றுப் பதிகத்தினால் அமண் தோற்றழிந்தமையும் கருதுக. நீறுபுனைந் தெழுந்தார் - என்ற பாடம் தவறு. அது கருத்தறியார் செய்த பிழை என்க. எழுந்தார் - பாண்டி நாட்டுக்கு எழுந்தருளத் துணிந்தார். கேட்டே எழுந்தார் திருமறையோர் - ஏகாரமும், வினைமுற்றின் பின் எழுவாய் வந்தமையும், பிள்ளையாரது செயல் தொடங்கிய விரைவுகுறித்தன. அச்செயலின் ஏனை விவரங்களை அவர்தம் புராணம் 612 - 615 பாட்டுக்களுட் கண்டு கொள்க. எழுந்தார் - (ஆய)பொழுது - என வரும்பாட்டுடன் தொடர்ந்து கொள்க. திருமறையோர் - நீறு நினைத்து எழுந்தார் - என்றது வேதங்களிற் றுணிந்தபடி திருநீற்றிற்கொண்ட உண்மைத் துணிபினால் எழுந்தார் என்பது குறிப்பு. "வேதத்திலுள்ளது நீறு" முதலிய தேவாரங்கள் காண்க. 286 1552. (வி-ரை.) காயம் மாசு பெருக்கி என்றது அமணர்களுட் குருமார் உடல் கழுவாது வேர்வை வர வெயினின்றுழலும் நிலையும், புழுக்கள் சாம் எனப் பல்துலக்காத நிலையும் முதலிய வழக்குக்களால் உடலில் பலவாறும் அழுக்குப் பெருக்கித் திரிவதைக் குறித்தது. "வேர்வந்து மாசூர்தர வெயினின்றுழல் வாரும்" (அண்ணாமலை - 10 நட்டபாடை - பிள்ளையார்), "பறிதலைக் குண்டர் தங்கள், கழுவா வுடலங் கழுவின வாக்கிய கற்பகமே" (ஆளுடைய பிள்ளையார் - அந் - 28. நம்பியாண்டார் நம்பி) முதலிய திருவாக்குக்கள் காண்க. கலதி - தீக்குணமுடையோர். "கள்வன் கடியன் கலதியிவ னென்னாதே" (திருவா - கோத் - 19). "கலதிவா யமணர்காண் கிலார்க ளாயினும்" (திருஞான - புரா - 820). கலதி - மூதேவிகளான என்பாருமுண்டு. கடுவினைசெய் மாயை சால மிக வல்லார் - கடுவினை - கொலையளவும் செய்யும் கொடுமை. மாயை - வஞ்சனை; வஞ்சனையாவது பொய்யை மெய்யாகக் காட்டியும், அவச்செயலைத் தவச்செயலாக் காட்டியும் ஒழுகுதல். முன்பாட்டிற் "பொய்வல்லமணர்" என்றதுமிது. "வஞ்சனை தெரிந்து சித்திரிப்பார்" (1347), "பொய்யினான் மெய்யை யாக்கப் புகுந்தநீர் போமின்" (திருஞான - புரா - 792). சால மிக - ஒரு பொருட் பன்மொழி மிகுதிப் பொருள் குறித்தது. மாயசாலம் என்று பாடங்கொண்டு வஞ்சம் என்றுரைப்பாரு முண்டு. அவர் மற்று எனை முன்செய்த தீயதொழிலும் பல - இங்கு நாயனார் சமணர்கள் தமக்குச் செய்த தீமைகளை நினைவுகூர்ந்து சொல்லியது அவர்கள் பால் கொண்ட செற்றம் மாச்சரியம் முதலிய தீக்குணம்பற்றி யெழுந்ததன்று,."நன்றல்ல தன்றே மறப்பது நன்று" (குறள்) என்னும் நீதிக் கிலக்கியமாயும், தீமைகள் செய்த அக்காலத்திலும் அவர்கள்பால் சிறிதும் வெகுளிகொள்ளாத அருண் மூர்த்தியாயும் விளங்கியவர் நாயனார். ஆனால் இங்கு அத்தீமைகளை நினைந்து கூட்டியதென்னையோ? என்னி, ஆளுடைய பிள்ளையார்பால் அத்தீமைகள் நிகழா திருத்தல் வேண்டுமென்னும் பரிவு மிகுதிபற்றிய அவ்வளவே நினைந்து கூறினர் என்க. கெட்டேன் - இரக்கக் குறிப்பு. (645) முதலியவை பார்க்க. இங்கு நாளும் கோளும் பற்றிய தீமையும் குறிப்பு. செல்ல இசையேன் யான் - நீர் செல்வதற்கு நான் இசையமாட்டேன் என்றது தமக்கு அவர்தந்த அப்பர் என்ற உரிமைபற்றி எழுந்த அருளாணை வாக்கு. "அரசருளிச் செய்கின்றார் பிள்ளாய்! அந்த வமண்கையர் வங்சனைக்கோ ரவதியில்லை; யுரைசெய்வ துளதுறுகோ டானுந் தீய வெழுந்தருள வுடன்படுவ தொண்ணா தென்ன" (திருஞான - புரா - 616) என்று இதனை உரிய வகையாற் |