பக்கம் எண் :


536திருத்தொண்டர் புராணம்

 

1581. (வி-ரை.) செக்கர்சடை - சிவந்த சடைக் கற்றையின் செறிவும் விரிவும். செக்கர் - செவ்வான் ஒளி போலுள்ள. உருவம் பற்றிய உவமம். "மாலையின் றாங்குருவே போலுஞ் சடைக்கற்றை" (அற் - அந்.). எதிர் இறைஞ்சுதல் - திருமுன் வணங்குதல். போற்றுதல் - துதித்தல். போற்றி - மொழி மாலைகள் சாத்தி என்று கூட்டுக. முக்கட்பிரானை விரும்பும் மொழி - இது திருத்தாண்டகத்தின் கருத்துப் போலும்.

திருத்தாண்டகங்கள் முதலாகத் தக்க மொழிமாலைகள் - முதலாக என்றதனால் ஆசிரியர் காலத்தில் இத்தலத்துக்கு முன்கூறிய கருத்தமைந்த திருத்தாண்டகப் பதிகம் ஒன்றேனும் வழங்கியிருத்தல் கூடுமென்று கருத இடமுண்டு. இப்போது இத்தலத்துக்கு நாயனாரது மொழி மாலைகள் என்ற பதிகங்களுள் ஒன்றும் கிடைத்திலது!

சார்ந்து - சார்தலாவது "சார்புணர்ந்து சார்புகெட ஒழுகின்" (குறள்) என்றபடி சார்ந்து ஒழுகுதல். மொழிமாலைகள் சாத்துதல் - வாக்கினாலும். சார்தல் - மனத்தினாலும், பணி செய்தல் - மெய்யினாலும் செய்யப்படுவன.

ஒழுகுவார் - முற்றெச்சம். ஒழுகுவாராய். ஒழுகுவார் - போந்து - வணங்கி - அணைந்தார் என்று மேல்வரும் பாட்டுடன் முடிக்க.

316

1582. (வி-ரை.) ஐயர் - பெருமையுடையார். இத்தலத்தில் இறைவர் வேதங்களை அளித்தனர் என்ற தல வரலாற்றின் குறிப்புப்போலும்.

திருவோத்தூர் ஏத்தி - அங்கு நின்றும் மேற் செல்பவர் நகர்ப்புறத்தே நின்று தலத்தைத் துதித்துச் சென்றனர். ஆளுடைய பிள்ளையார் திருவாரூர், திருக்காளத்தி முதலியவற்றைப் புறத்து வணங்கி மேற்சென்ற வரலாறுகளை இங்கு நினைவு கூர்க.

செழும்புவளம் உய்ய நஞ்சுண்டு - புவனங்களைப் படைத்தல் காத்தல் முதலிய தொழில்களைச் செய்யும் அதிகாரிகளாகிய தேவர்கள் உய்ய நஞ்சுண்டாராதலின் அதனால் உலகங்கள் உய்ந்தன என்பார் புவனம் உய்ய என்றார்.

உறைதல் - வெளிப்பட்டு வீற்றிருந்தருளுதல்.

பதிகள் பல - இளையனார் வேலூர், திருவன்பார்த்தான் பனங்காட்டூர், திருமாகறல், திருக்குரங்கணின் முட்டம் முதலியன. இவைகட்கு நாயனார் பதிகங்கள் கிடைத்திலவாதலின் பதிகள் பல வணங்கி என்று பொதுவகையாற் கூறினார்.

தையல் தழுவக்குழைந்த பிரான் - திரு ஏகம்பநாதர். இந்த வரலாறு முன்னர்த் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்துள் (1140 - 1141) விரித்தோதப்பட்டது. காஞ்சிப்புராணம் தழுவக்குழைந்த படலம் பார்க்க.

தங்கும் - நிலைபெற வெளிப்பட்டு வீற்றிருக்கும்

தெய்வப்பதி - தெய்வத் தன்மை வாய்ந்த தலம். தெய்வத்தன்மையாவது அந்நாட் போலவே இந்நாளிலும் நற்பயன்றந்து நிலவுதல். மக்களை மலநீக்கம் செய்து தேவு செய்தல் தெய்வத்தன்மையாம். "வானலைக் குந்தவத் தேவுசெய்வானிடம்" (பிள் - கொல்லி - தென்குடித்திட்டை). திருக்குறிப்பு - புரா - தலவிசேடம் பார்க்க.

வையமுழுதும் தொழுது ஏத்தும் - உலகில் விளங்க அறியப்படும் முத்தித்தலங்கள் ஏழனுள் ஒன்றாயும், உலகமுய்ய அம்மை தவஞ்செய்யப் பெற்று அறம் வளர்க்கின்றமையாலும் உலகமெல்லாந் தொழுந்தன்மை பெற்றது.

மதில்குழ் - காஞ்சி, மாநகரமும் சோழர்களது தலைநகரமுமாதலின் மதிற் பெருமை பெற்றது. மதில் கொண்டணிந்த (1586); "மதிற்கச்சி" (தேவா).

காஞ்சி - காஞ்சி மரத்தை யுடைமையால் காஞ்சி நகரம் என்ற காரணப் பெயர் பெற்றது என்பர். 1130 - 1152ல் உரைத்தவை பார்க்க.