பக்கம் எண் :


திருநாவுக்கரசு நாயனார் புராணம்537

 

திருவோத்தூர்

தேவாரக் குறிப்பு :- இத்தலத்துக்கு நாயனார் பதிகங்கள் கிடைத்தில; நாயனார் இத்தலத்தே திருத்தாண்டகங்கள் முதலாக மொழி மாலைகள் சாத்தினார் (1582) என்று ஆசிரியர் அறிவிக்கின்றார். ஆசிரியர் காலத்தில் இத்தலத் திருத்தாண்டகப் பதிகத்துள் சில பாசுரங்களேனும் வழங்கி யிருத்தல் கூடுமென்பது கருதப்படும். பின்னால் அவையும் வழக்காறொழிந்தன போலும்.

தலவிசேடம் :- திருவோத்தூர் - தொண்டை நாட்டில் 8-வது தலம். சிவபெருமான் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் மறைகளை ஓதுவித்தருளிய தலமென்ற காரணத்தால் இப்பெயரெய்தியது. ஒத்து என்பது வேதம். ஆளுடைய பிள்ளையார் இத்தலத்தில் ஒரு அடியவர் பொருட்டு 1000 ஆண் பனைகளை யெல்லாம் "குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர்" என்ற திருவாக்கினால் பெண் பனைகளாக்கிய அற்புதம் நிகழ்த்தியருளினர். அவர் தம் புராணம் 974 - 982 பாட்டுக்கள் பார்க்க. அப் பனைகளும் பிள்ளையாரது திருவாக்கிற் பட்ட புண்ணியப் பேற்றினால் காலக்கிரமத்தில் சிவத்தை அடைந்தன. கோயிலிற் பனைதாபிக்கப்பட்டு வழிபடப் பெறுகின்றது. சுவாமி - வேதநாதர்; அம்மை -இள முலைநாயகி; தீர்த்தம் - சேயாறு; பதிகம் 1.

இது திருமாகறலினின்றும் தென் மேற்கே மட்சாலை வழி 15 நாழிகையளவில் சேயாற்றிற்கு வடக்கிலுள்ளது. திரு அச்சிறுபாக்கம் என்னும் புகை வண்டி நிலயத்தினின்று வடமேற்கே 18 நாழிகையிலும், காஞ்சிபுரத்துக்கு மேற்கே 18 நாழிகையிலும் உள்ளது.

1583.

"ஞால முய்யத் திருவதிகை நம்பர் தம்பே ரருளினாற்
 சூலை மடுத்து முன்னாண்ட தொண்டர் வரப்பெற் றோ"மென்று
 காலை மலருங் கமலம்போற் காஞ்சி வாணர் முகமெல்லாஞ்
 சால மலர்ந்து களிசிறப்பத் தழைத்த மனங்க டாங்குவார்,

318

1584.

மாட வீதிமருங் கெல்லா மணிவா யில்களிற் றோரணங்கள்
நீடு கதலி யுடன்கமுகு நிரைத்து நிறைபொற் குடந்தீபம்
தோடு குலவு மலர்மாலை சூழ்ந்த வாசப் பந்தர்களும்
ஆடு கொடியு முடனெடுத்தங் கணிநீள் காஞ்சி யலங்கரித்தார்.

1583. (இ-ள்.) வெளிப்படை. "உலகமுய்யும் பொருட்டுத் திருவதிகைப் பெருமான் தமது பேரருளினாலே சூலைநோயைக் கொடுத்து நேரே ஆட்கொண்டருளிய திருத்தொண்டராகிய திருநாவுக்கரசர் இங்கு எழுந்தருளிவரும் பேறு பெற்றோம்" என்று கொண்டு, காஞ்சியிலுள்ளார் தங்களது முகங்களெல்லாம் காலையில் மலரும் தாமரைபோல மிக மலர்ச்சியடைந்து மகிழ்ச்சி கூரத் தழைத்த மனமுடையவர்களாகி,

318

1584. (இ-ள்.) வெளிப்படை. மாடவீதிகளின் பக்கங்களிலெல்லாம் அழகிய வாயில்களிலெங்கும், தோரணங்களும் நீடும் வாழைகளுடனே கமுகுகளையும் வரிசை பெறக் காட்டி, நிறைகுடமும், தீபங்களும், இதழ்கள் பொருந்திய மலர் மாலைகளும் சூழ்ந்த வாசனையுடைய பந்தர்களும், ஆடும் கொடுகளும் ஆக இவ்வகையான அலங்காரங்களை எல்லாம் எடுப்பித்து, அவ்விடத்தே, அழகிய நீண்ட காஞ்சி நகரத்தை மேலும் அலங்கரித்தார்கள்.

319

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.