பக்கம் எண் :


676திருத்தொண்டர் புராணம்

 

1659. (வி-ரை.) வரும் எல்லை - வருகின்ற இடம். எல்லை - ஊர் எல்லை என்பாருமுண்டு. எல்லை கலந்து எனக்கூட்டி எல்லையை அணுகி அடைந்து
என்பாருமுண்டு.

காதலித்தார் சூழும் - உடன் வந்த திருக்கூட்டத்தார்களும் திருச்சின்னத்தின் ஓசையைக் கேட்டுத் தரிசிக்கும் விருப்புடன் வந்து சூழ்ந்த அடியார்களுமாகச் சூழ்கின்ற. காதலித்தாராகிய நாயனார் என்றலுமொன்று. முன்பாட்டிற் "காதலினால்" என்றதும் கருதுக.

நெருக்கில் - நெருங்கிக் கூடிய கூட்டத்தினுள்.

காணாமே தொழுதருளி - தம்மைப் பிள்ளையார் காணாத வகையினாற்றொழுதல், கண்டால் அவர் சிவிகையில் எழுந்தருளாது கீழ் இறங்கியருள்வர் என்றதும், அவ்வாறு இறங்கியருளின் அவர் ஏறி வரும்போது சிவிகை தாங்கும்பேறு தமக்கு வாய்க்காது என்றதும் கருத்தாம்.

வாழியவர் - உலகத்தவரை வாழ்விக்க அவதரித்த அவர். "ஏழிசையும் பல கலையு மெவ்வுயிருந் தனித்தனியே, வாழவரு மவர்தம்மை" (திருஞான - புரா - 48).

தாழும் உடல் இது கொண்டு தாங்குவன் - பிணி முதலியவற்றால் ஒறுப்புண்டு அழியுந்தன்மையுடைமையாலும், புன்னெறியா மமண்சமயத் தொடக்குண்டு போந்து இறைவன் கருணையால் ஆட்கொண்டு தூய்மை செய்ய நின்றமையாலும், தாழும் உடல் இது என்றார். அத்தாழ்வு தீரத் தாங்குவன் என்றது - ஏனை நல்லடியார்கள் நற்பேறு பெற்ற நல்லுடல் கொண்டு தாங்க, நான், அவர் போலல்லாது எனது உடலின் தாழ்வு தீரத் தாங்குவன் என்ற கருத்தாம்.

தரித்தார் - மனத்தில் எண்ணியவராய்; முற்றெச்சம். தரித்தல் - மனத்துள் எண்ணம் வைத்தல். தரித்தார் - சிவிகையைத் தாங்கினார் என்ற வுரை பிழை. "வந்து ஒருவரறியாமே.......தாங்கி" - என்று வேறு ஒருவரும் அறியாமல் வருதலும் தாங்குதலும் மேல்வரும் பாட்டிற் கூறுதல் காண்க.

394

1660. (வி-ரை.) ஒருவர் அறியாமே மறைந்த வடிவோடும் - மறைந்தவடிவு - மறைத்துக் கொண்டவடிவு. பிறர் அறிந்தால் தாம் எண்ணிய திருப்பணிக்கு முட்டுப்பாடு நேரும் என்று கருதி வடிவை மறைத்தனர்.

ஏறி எழுந்தருளி வரும் - எறிவரும் காலத்தில் சிவிகை தாங்குவதனைப் பெரும் பேறாக நாயனார் கருதினார். இதனை "உம்மடிகள் தாங்கிவரும் பெருவாழ்வு" (1661) என்பது காண்க.

சந்தமணி - சந்தம் - நிறம். அழகு என்றலுமாம். மணி - முத்து.

தாங்குவார் - சுமப்பவர். முன்தாங்கும் பேறு பெற்ற நல்லோர் என்ற குறிப்புப்பெறத், தாங்குவாருடன் - என்று உடன் உருபை அவர் பெயரோடு சார்த்தி ஓதினார்.

சிந்தைகளிப்புற - இப்பெரும் பேறு பெற்றதனால் மனமிக மகிழ்ச்சியடைய. பின் எக்காலத்தும் இத்திறத்தைச் சிந்திக்கும் அன்பர் சிந்தைகள் எல்லாம் களிப்படையும்படி என்ற குறிப்புமாம்.

யாரும் - பெரிய அத்திருக்கூட்டத்தில் எவரும். உம்மை முற்றும்மை. முன் பல காலம் திருவீழிமிழலையில் உடன் அமர்ந்து பயின்றவரும் என்று சிறப்பும்மையும் எச்சவும்மையுமாம்.

தெளிந்திலர் - இன்னார் என்று அறிந்திலர். அவரது வடிவுகண்டாரன்றி அவ்வடிவுக்குள் மறைந்தவர் நாயனார் என்று தெளிய இயலாதாராயினர்.

395