பக்கம் எண் :


98திருத்தொண்டர் புராணம்

 

பெரியோன்" என்று உடன்பட்டுச் சிவபிரானைப் பேசும். பரசும் - புறச்சமயிகளும் பரவும் என்ற குறிப்பும் காண்க. பிரஹ்மம் என்பதன் பொருளும் இது.

இங்கு வந்து அரசு அருள் பெற்றது என்க.

அரசு - திருநாவுக்கரசு. "பரசும்....அருள்பெற்றது" இது திருவதிகையில் வாழ்ந்தஅடியவரும் பிறரும் அருளை வியந்து பலவகையாலும் பாராட்டியது.

அரசு அருள் பெற்று உலகு உய்ந்தது - பெற்று - பெற்றதனால். நல்லார் ஒருவர் பெற்ற அருள், அவர் வழிகாட்டக் காணும் எல்லார்க்கும் ஆகும் என்பதும், சைவ சமயம் ஒரு பரமாசாரியரை அடைந்ததனால் உலகம் உய்ந்தது என்பதும் குறிக்கப்பட்டன. உய்ந்தது - இறந்த காலம் விரைவும் உறுதியும் குறித்தது.

புடைசூழ் - அரசு அருள்பெற்ற சிறப்பினைக் கண்டு மகிழ்ந்து சூழ்ந்த.

முரசம்........கண்டையுடன் - பலவகை இயங்கள் அவர்களின் மகிழ்ச்சிக்குறியாக முழக்கப்பட்டன என்பது. பல இயங்களின் பெயர்களை அடைமொழியின்றி ஒலிக் குறிப்புப்பட அடுக்கிய கவிநயம் காண்க. இது பெருங்கவிகளிற் காணப்படும் சிறப்பு.

பதிதான் - கடலென்ன நிறைந்துளதே என்று முடிக்க. முழக்கமாகிய வினை பற்றி எழுந்த உவமம். முழங்குதலால் என்றது காண்க.

உடன் - சங்கொலி - முன் சொன்ன இயங்களினின்றும் உடன் என்ற உருபு சங்கொலியினைப் பிரித்துக் கூட்டியது. முற்கூறிய இயங்கள் தனித்தனியும், சங்குகள் பலகூடி வரிசைப்படவும் முழக்கப்படுமென்பது. நிரைசங்கு ஒலி - என்ற குறிப்பும் அது. நிரை - வரிசை. அன்றியும் நிறைசங்கொலி ஈண்டு உவமான உவமேயப் பொருளிரண்டினும் பொருந்தும் சிறப்புடைமையும் கருதி வேறுபிரித்து உரைக்கப்பட்டது என்றலுமாம் "பொங்கொளிச் சுழுனையூடு புலம்பிசைக் குறியேயான மங்கல சங்கம்" (வாத - புரா - மண்சு - சருக் - 91) என்ற சிறப்பு முடையது. ஏகாரம் - அசை. தண்ணுமை - மத்தளம். முழவு - குடமுழா. கிளை - வேய்ங்குழல் என்றும், ஒருவகை நரம்புக்கருவி என்றும் கூறுப.

கண்டை - கண்டாமணி. படகம் - சிறுபறை. தியானயோகத்திற் கேட்கும பத்து நாதங்கள்போல இங்கும் பத்து இயங்கள் ஒலித்தமை காண்க.

முழங்குதலால் - முழக்கப்படுதலால். செயப்பாட்டுவினை செய்வினை போல வந்தது. இயம்புதலால் என்பதும் பாடம்.

பாழ்பட வந்து - பொய்யென்று யாவருக்கும் புலப்படும்படி சைவத்திற் சார்ந்தது. பின்னர் அரசனும் உண்மைதெரிந்து சைவனாகிச் சமண் பாழிகளை இடித்து எறியும் நிலையினையும் குறிப்பாலுணர்த்தியது.                                                                                                            76

1342.

மையற் றுறையே றிமகிழ்ந் தலர்சீர்
         வாகீ சர்மனத் தொடுவாய் மையுடன்
மெய்யுற் றதிருப் பணிசெய் பவராய்
         விரவுஞ் சிவசின் னம்விளங் கிடவே
யெய்துற் றதியா னமறா வுணர்வு
         மீறின் றியெழுந் திருவா சகமுங்
கையிற் றிகழும் முழவார முடன்
         கைத்தொண் டுகலந் துகசிந் தனரே.

77

(இ-ள்.) வெளிப்படை. மயக்கந்தரும் புறச்சமயமாகிய சமணசமயத் துறையினின்றும் மேலேறி மகிழ்ந்து பெருகும் சிறப்பினையுடைய திருநாவுக்கரசர், மனத்தாலும் வாக்காலும் உடலாலும் பொருந்திய சிவத்திருப்பணி செய்வாராகி,