பக்கம் எண் :

கடவுள் வாழ்த்து1

திருச்சிற்றம்பலம்

தணிகைப் புராணம்

விநாயகர் காப்பு

மும்ம தத்தனென் றொருபெயர் தனக்குமொய் கூந்தற்
கொம்மை வெம்முலைக் கோற்றொடிக் கொடிச்சியை யிலைவேற்
கைம்ம லர்த்தனி யிளவற்குங் கஃஃறெனுங் கானத்
தம்ம முந்துபுக் குறுத்தவ னடிமலர் பணிவாம்.

(இதன் பொருள்) முற்காலத்தில் கஃறென்னும் கரு நிறத்தையுடைய காட்டின்கண் யானை வடிவாய்ச் சென்று, மூன்று மதத்தையுடைய யானை முகத்தனென்ற ஒப்பற்ற பெயரைத் தனக்கும், செறிந்த குழலினையும் கண்டார்க்கு விருப்பினைத் தருகின்ற பருத்த தனங்களையும், திரண்ட வளையினையுமுடைய வள்ளி நாயகியாரை இலைத்தொழிலமைந்த வேற்படையைத் தாங்கிய திருக்கையாகிய தாமரை மலரினையுடைய முருகக் கடவுளுக்கும் சேர்த்தவனாகிய விநாயகக் கடவுளின் பாதமாகிய தாமரை மலரை வணங்குவாம்.

(விளக்கம்) தனக்கு மும்மதத்தனென்ற பெயரினையும், இளவற்கு வள்ளி நாயகியாரையும் சேர்த்தவ னடிமலரைப் பணிவாமென வினை முடிபு செய்க.

மூத்த பிள்ளையாருக்கு யானையுறுப்புக் கண்டத்திற்குக் கீழின்றாதலின் மும்மதத்தனாதல் இயையா தாயினும் மெய்யடியார்க ளெல்லாம் அவனை மும்மதத்தனென்றே கூறிப்போந்தனராதலின் அவர் சொற்பழுதுறாவண்ணம் யானை வடிவங்கொண்டான் என்பார் 'மும்மதத்தன்' என்றார்; என்ற வென்னும் பெயரெச்சத்தகரம் விகாரத்தாற் றொக்கது; கோல் - திரட்சி; இனி நீலமென்பது நீலெனக் கடைகுறைந்து நின்றாற்போல, கோலமென்பது ஈறு கெட்டுநின்றதெனினுமாம்; கஃறு - கருமை 'இதனைத் தொல்காப்பியம் (எழுத்ததிகாரம்) உருவினு மிசையினும்' என்னுஞ் சூத்திர வுரையின்கண் 'கஃறென்னுங் கல்லதரத்தம்' என நிறத்தின்கண்ணும் வருமென வுரையாசிரியர் கூறிய வுரையா னுணர்க. தன்னை மும்மதத்தனென்ற அடியாரெண்ண முற்றுறப் பெயரைத் தனக்கும், வள்ளிநாயகியாரை வேட்டுத்தன்னை நினைந்த இளையோற்கு அவரையுஞ் சேர்த்தவன் யாமும் வணங்கின் இந்நூல் இடையூறின்றி இனிது முற்றுறச்செய் தவைக்களத்திற் சேர்ப்பனென்பது தோன்ற 'உறுத் தவனடிமலர் பணிவாம்' என்றார்; "எவ்வயிற் பெயரும் வெளிப்படத் தோன்றி அவ்வயினிலையல் செவ்விதென்ப" என்பதோத்தாகலின் யாம் என்னும் எழுவாய் தொக்குநின்றது. இனி முந்துபுக் குறுத்தவனென்பதற்குப் பிறவாறு முரைப்பர். அம்ம வியப்பிடைச் சொல்.(1)