| ஊற்றிருக்கு மதக்கலுழி யுன்னுமடி | | யாருளத்துக் கறையை மண்ணக் | | கூற்றிருக்குங் கூர்நுதிவெண் கோடுவெளிற் | | றறிவிரண்டுங் குமைப்ப மேனி | | தோற்றிருக்கு மளப்பரிய சுடர்நிறைப்பத் | | தோரணக்கம் பத்தெஞ் ஞான்றும் | | வீற்றிருக்கும் பெருமானை விரைமலர்தூய்ப் | | பணிந்தெழுந்தெம் மெலிவு தீர்வாம். |
(இ - ள்.) ஊற்றிருந் தொழுகுகின்ற மதமாகிய கான்யாறு தன்னை யிடையறாது நினைக்கின்ற அடியாருள்ளத்தின்க ணுளவாகிய அஞ்ஞான மாகிய களங்கத்தைக் கழுவ (கொலைத் தொழில் கருதி) இயமன் தங்கி யிருக்கும் மிக்க நுதியினையுடைய வெள்ளிய கொம்பு உள்ளீடிலவாகிய பாச வறிவு பசு வறிவென்னும் இரண்டையுங் கெடுக்க, இறைவன் றிரு வாயினின்றுந் தோன்றிய வேதங்களும் அளத்தற்கரிய திருமேனி (பர ஞானமாகிய) சுடரை அவருள்ளத்து நிறைக்கத் தோரண கம்பத்தினிடத்து, எந்நாளும் வேறொருவர்க்கில்லாத சிறப்புடனெழுந்தருளி யிருக்கும் பெருமையையுடைய விநாயகப் பெருமானை வாசனையுடைய மலர்களால் அருச்சித்து வணங்கி எமது வருத்தத்தை நீக்குவாம். (வி - ம்.) பாசஞானம் - பரை பைசந்தி மத்திமை வைகரியென்னும் நால்வகை வாக்காகிய சத்தப்பிரபஞ்சமும் மண்முத னாதமீறாகிய அருத்தப் பிரபஞ்சமுமாகிய இவை காரணமாக நிகழும் அறிவு; பசு ஞானம் - இவை கீழ்நாடலாலே 1 காதலினால் நான்பிரமமென்னும் ஞானம்; இவையிரண்டும் பதிஞானம் போன்றுரனின்மையான் 'வெளிற்றறி' வென்றார். வெளிறு - உள்ளீடின்மை; இதனை "வெளிற்றுப் பனந்துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப" என்னும் புறநானூற்றடியா னுணர்க. பணிந்தெழுந் தென்பது ஒருசொல் விழுக்காடு. கூற்று - கூற்றின் றன்மை அஃதாவது கொலைத் தொழில்; இனிக் கூற்றுப் புகழெனினுமாம். தோற்றிருக்கு : வினைத்தொகை. தோற்றிருக்கும் அளப்பரிய மேனி சுடர் நிறைப்ப என இயைக்க. சொற்கிடந்தவாறே இருக்கும் அளப்பரிய சுடர் எனினுமாம். (2) |