பக்கம் எண் :

களவுப் படலம்1065

நீடமைத்தோழி யாடிடம் படர்தல்

அஃதாவது தலைமகனுக்குக் குறியிடம் கூறின தோழி நந்தனத்தின் பெருமையால் மலைகள் வருந்தச் சொல்லாற் கிளிகள் வருந்தக் கண்ணாற் காவிகளேங்க ஆயக்கூட்டத்தோடுஞ் சென்று விளையாடுவோம் எனத் தலைவியைக்கொண்டு படராநிற்றல்.

 அரும்பு முலையி னவிர்குவ டேங்க வமிழ்திசையின்
 சுரும்பு முரலும் பொழிற்கிளி யேங்கத் துணைவிழியின்
 விரும்பு நறுஞ்சுனைக் காவிக ளேங்கவென் றாடுகஞ்செல்
 கரும்பு விழைபணைத் தோளாய் வளர்க்குநங் கார்ப்புனமே.

(இ - ள்.) கன்னலும் இவ்வழகு நமக்கில்லையென விழையத்தக்க தோளினையுடையாய்! நம்மவர் வளர்த்தலைச் செய்கின்ற கரிய புனத்தின் கண்ணுள்ள மலைகள், தோன்று நந்தனங்களினழகு தங்களுக்கில்லை யென்று வருந்தவும், அமிழ்தினையொத்த இனிமையுடன்கூடிய நஞ்சொற்களான் வண்டினங்களொலிக்கும் பொழிலின்கண்ணுள்ள கிளிகள் வருந்தவும், நம்மிரண்டாகிய விழியினழகினைத் தாங்கள் விழையும் நல்ல சுனைகளிலுள்ள காவிப்பூக்கள் வருந்தவும் அவைகளை வெற்றி கொண்டு விளையாடுவோம், செல்வாயாக வென்றன ளென்க.

(வி - ம்.) விழை - உவம உருபு. பணை - பருத்த. செல் - செல்வாய். மெய்ப்பாடு : பெருமிதம், உவகையுமாம். பயன் : குறியிடத்துப் போதருதல். (301)

ஆயவெள்ளம் மாயத்தினகற்றல்

அஃதாவது ஆடிடம்படர்ந்த தோழி தலைமகன்மாட்டுக் கூறிய குறியிடத்து இவளைக் கொண்டுசென்றுய்க்கும்போது ஆயத்தாரைத் தம்மிடத்துநின்று நீக்கவேண்டுதலின் அப்பொழிற் பக்கலிற் சிலர் போய்க்கரக்க, உப்பொழிற் சாரலிற் சிலர் போய்க்கரக்க அதன் பக்கலிலுள்ள கரிய பொழிலிற் சிலர் போய்மறைக என்று தோழிகூறவே அவ்விளையாட்டுக்குரியார் தலைமகள் அவ்வவ் விடங்களில் வருவளென்று கருதி எல்லாரும் பிரிவர் அவ்வகையாய வெள்ளத்தைப் பிரிவித்துத் தமியளாய் நின்ற தலைமகளையுங்கொண்டு யாமவர்களைத் துருவிச் செல்வோமென அக்குறியிடத்துச் செல்லாநிற்றல்.

 அப்பொழிற் சாரற் சிலர்போய்க் கரக்க வருவிதத்தும்
 உப்பொழிற் சாரற் சிலர்போய்க் கரக்க வுதன்புடைய
 மைப்பொழிற் சாரற் சிலர்போய்க் கரக்க வளங்கனிந்த
 இப்பொழிற் சாரலின் யாந்துரு விச்சென்று மேந்திழையே.

(இ - ள்.) தாங்கப்பெற்ற அணிகலன்களை யணிந்தவளே! அதோ தோன்றுபொழிலின் பக்கலிற் சிலர் சென்று கரக்க அருவிநீர் தாவிச் செல்கின்ற உந்தப்பொழிலின் பக்கலிற் சிலர் சென்று கரக்க உதன் பக்கத்துள்ள மேகந்தங்கப்பெற்ற சோலையின்பக்கலிற் சிலர்போய்க் கரக்க வளமுதிர்ந்த இப்பொழிலின் பக்கலினின்றும் யாமவர்களைத் தேடிச் செல்வோ மென்றாளென்க.