பக்கம் எண் :

1064தணிகைப் புராணம்

(இ - ள்.) விரலாற் றெரிக்கப்பெற்ற மெல்லிய யாழ்நரம்பினிசைபோன்ற சொல்லினையும் காதளவோடுகின்ற செவ்வரி கருவரி பரந்த கண்ணினையுமுடைய தலைவி முன்னர் வெண்மையுற்றிருந்த உடம்பு முழுவதும் வருடிக்கொள்ளப்பெற்ற விருப்பமைந்த தளிரால் அவ்வெண்ணிறத்தடங்கித் தளர்ந்துபோன செந்நிறத்தையும் பெற்றனள். அஃதன்றிச் செல்லாநின்ற உயிரையுந் தாங்கப்பெற்றனள். ஐயனே நீ தந்த வளப்பமமைந்த தளிர் வளரச்செய்கின்ற தேவருலகத்துள்ள அமிர்தமோ வென்றன ளென்க.

(வி - ம்.) உளரிய - தெரித்த. வருடிப் பெற்றாளென்க. முன்னர் வெண்ணிற மேற்பட்டிருத்தலான் அவ்வெண்ணிறத்தடங்கித் தளர்ச்சியுற்ற, செந்நிறத்தைப் பெற்றன ளென்பதாம். "ஆவிதாங்கிய காரணத்தால் வான்மருந்தோ வென்றாள்." வளரிய - வளரச்செய்கின்ற. இதனால் வெண்ணிற நீங்கப்பெற்றன ளென்பது கருத்து. மெய்ப்பாடு : உவகை. பயன் : தலைமகனை யாற்றுவித்தல்.

(299)

குறியிடந்தலைவன் கொள்ளக்கூறல

அஃதாவது தழைவிருப்புரைத்த தோழி. அவள் விளையாடுமிடம் புறத்தே பார்ப்பினிருளாய் அகத்தேயுள்ள மணியொளியால் இறைவன் றிருவுருவை ஒத்திருக்கும் அவ்விடத்து வருவாயாக எனக் கூறாநிற்றல்.

 புறங்கொண்டு பார்ப்பி னிருளாய்ப் புகுந்தகத் தேகலவின்
 நிறங்கொண்ட பன்மணி நீடொளி யாய்நிவந் தோங்கியழல்
 மறங்கொண்ட வேங்கை யதளுடை யான்வண்ண மானுவதால்
 அறங்கொண்ட செஞ்சிலை யோயெங்கண் மாத ரணிபொழிலே.

(இ - ள்.) அறத்தொழிலைத் தன்னிடத்துக்கொண்ட செவ்விய வில்லையுடைய தலைவனே எங்கள் தலைவியால் அழகைப்பெற்ற சோலையானது புறத்தேயிருந்து நோக்கின் இருள்வடிவாகி அகத்தேசென்று பொருந்தின் நிறத்தைத் தன்னிடத்தேகொண்ட பலமணிகளான் மிக்க ஒளியுடையதாகி மிக உயர்ந்து, கோபத்துடன்கூடிய மறத்தினைக் கொண்ட வேங்கைத் தோலினையணிந்த இறைவன் செந்நிறத்தை யொத்தலான் அதுவே நீ தலைவியைக் கூடுங்குறியிடமாகக் கொள்க என்றன ளென்க.

(வி - ம்.) இறைவன் யானைத்தோலினைப் புறத்தே போர்த்திருத்தலான் அவன் திருவுருவம் காண்பார்க்கிருளாகவும் அத்தோலான் போர்க்கப்பெற்று அகத்தேயுள்ள திருவுருவம் நோக்கி யுணர்வார்க்கு செந்நிறமாகவும் விளங்கல்போல இப்பொழிலும் புறத்தே காண்பார்க்கு இருள் வடிவாய் அகத்தே நோக்குவார்க்கு ஆண்டுள்ள மணியொளியால் செந்நிறமுற்றுத் தோன்றுதலான். நிவந்தோங்கி யென்பதன்காறும் இறைவனுக்கும் பொழிலுக்கும் சிலேடைப் பொருள் கொள்க. அற நெறிபிழையா வருந்தொழிலினையுடையான் என்பாள் 'அறங்கொண்ட செஞ்சிலையோய்' என்றனள், மெய்ப்பாடு : உவகை. பயன் : குறியிட முணர்த்துதல்.

(300)