பக்கம் எண் :

களவுப் படலம்1063

(வி - ம்.) தீரா - நீங்காத. நனை - அரும்பு. தளையையேற்பின் ஒருதலைவனைக் கூடினாளென்று யாவரும் பழிகூறுவராயினும் ஏலாமை விடின் அப்பழி சிறிதாம்வண்ணம் யாவரும் சிரிப்பரென்பாள் "மடல் புனைந்து யாவருமார்ப்பப் படர்தரின் ஏற்பதினூங்கு நவையுளதாம் என்றனள். ஆர்த்தல் - சிரித்தல். நாடவர் நந்தமை யார்ப்ப வார்ப்ப என்னுமிடத்திப் பொருட்டாதல் காண்க. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : கையுறையேற்பித்தல்.                                                       

(297)

தோகையைக் கையுறை தோழி யேற்பித்தல்

அஃதாவது தழையேலாதொழியினும் பழியேறுமெனத் தழையேற்பதே காரியமெனக் கொண்டு நிற்பவா னெல்லையைக்கடந்த சிவபுரத்தளவு விரிந்த கற்பகச்சோலையும் வறியவென்று சொல்லும் வண்ணம் எழுந்த தெய்வத்தன்மை பொருந்திய கணியின்றளிரைத் தந்தனர். ஆதலான் தங்கிய கூந்தலையுடையாளே ஏற்பாயாகவெனக் கூறாநிற்றல்.

 விண்ணத் துயர்ந்த சிவபுரத் தெல்லை விரிபொழிலும்
 வண்ணத் துயர்ந்த விதற்கிணை யில்லா வறியவென
 எண்ணத் துயர்ந்த விறைவரிவ் வோங்க லெழுந்ததெய்வத்
 தண்ணத் துயர்ந்த கணித்தளி ரீத்தனர் தாழ்குழலே.

(இ - ள்.) தாழ்ந்த குழலினையுடையாளே! தேவருலகத்துத் தோன்றிச் சிவபுரத் தெல்லையளவு விரிந்த கற்பகச்சோலையும் வறிதா மென்று சொல்லும் வண்ணம் எனது மனதின்கணுயர்வாகக் கருதப் பெற்ற தலைவர் இதற்கொப்பான தளிர்கள் வேறில்லாத இம்மலையின் கட்டோன்றிய நிறத்தாலுயர்ந்த தெய்வத்தன்மை பொருந்திய குளிர்ச்சி யோடுயர்ந்த வேங்கைமரத்தின் றளிர்களைக் கொடுத்தனராதலான் நா மேற்றுக்கோடல் தகுதியாமென்க.

(வி - ம்.) தேவலோகத்துளவாகிச் சிவபுரத்தெல்லை வரையும் விரிந்த பொழில் என்க. இணையிலாக்கணி, வறியவாம்படி யெழுந்த கணியென இயைக்க. எண்ணத்துயர்ந்த இறைவனென்க. அத்து நான்குஞ் சாரியை. தண் - குளிர்ச்சி. மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : கையுறை ஏற்பித்தல்.                                                      

(298)

ஏற்றவள் வண்ண மேந்தலுக் குரைத்தல்

அஃதாவது தலைமகளைத் தழையேற்பித்துத் தலைமகனுழைச் சென்று நீ தந்த தழையை யான்சென்று கொடுத்தனன். அதுகொண்டு அவள் செய்தது சொல்லிற் பெருகுமெனத் தலைமகளது விருப்பங் கூறாநிற்றல்.

 உளரிய மென்னரம் பின்மொழி யோடரிக் கண்மடவாள்
 விளரிய வங்கமெ லாம்வரு டிக்கொண்ட வீழ்தளிரால்
 தளரிய வண்ணம்பெற் றாள்செல்லு மாவியுந் தாங்கினளால்
 வளரிய வான்மருந் தோவைய நீதந்த வண்டளிரே.