பக்கம் எண் :

களவுப் படலம்1067

(இ - ள்.) கீழோர் மார்பின்கண் அவர்செய்த நல்வினையால் பொருந்துகின்ற திருமால் மார்பகத்துத் தங்கிய திருமகளும், குற்றந் தீர்ந்த மேலோர் நாவின்கட்டங்கிய (பிரமன்) விரிந்த நாவகத்து அணங்காகிய கலைமகளும் சிறப்பினையுடைய நின்னைப்போல மனத்தகத்தாதலும் யான்செல்ல நீயுஞ்சென்று தேனுடன்கூடிய சோலையினுள் ளிடத்தாதலும் பொருந்துதலரிதென்றா னென்க.

(வி - ம்.) பூரியர் - கீழோர். மருமத்துப்பொன் - இலக்குமி. ஆரியர் - நல்லோர். அடைதல் - தங்குதல். அலர்நாவகத்தணங்கு - பிரமன் நாவிற்றங்கிய கலைமகள். மனத்தகத்தாதலும், தவிரப்பொழிலினுள்ளகத்தாதலும் அவர்கட்கு மேவரிதென்க. பொழிலினுள்ளகத்தாதல் புறத்தகத்தாதலையும் குறிப்பித்துநின்றது. செல்லச் சென்று - யான் வர நீயும் வந்ததென்க. மெய்ப்பாடு : உவகை. பயன் : ஆற்றுதல், மகிழ்வித்தலுமாம்.

(304)

 வாடிடை நோக்கி வருந்தினன் போல
 ஆடமைத் தோளியை யார்வமோ டணைதல்

அஃதாவது உவந்துரைப்பக் கேட்ட தலைமகள் பெருநாணுறீஇ வருந்தாநிற்பத் தலைமகன் இடையினை விளித்துத் தோளினோடு கொங்கைகள் பெருத்தன, விழிகள் மதர்த்தன, அல்குல் வளர்ந்தது, கூந்தல் தெய்வங் கமழ்ந்தது, தளிரின் அழகை மேனிகவர்ந்தது, எல்லா உறுப்புக்களு மென்னைக் கண்டு பொலிவுபெற இடையே என்னைக் காணுந்தோறு நினக்கு என்னோடுளவாகிய வேறுபாடு என்னையென முனிந்து அவளிறு மருங்குல் தாங்கி யணையாநிற்றல்.

 பெருத்தன தோளொடு கொங்கை மதர்த்த பிணைவிழிக்கண்
 திருத்தக வல்குல் வளர்ந்தது கூந்தறெய் வங்கமழ்ந்த
 குருத்தளிர் மாமை கவர்ந்தது மேனி கொடிமருங்குல்
 விருத்தமென் னோநினக் கென்னொடு காண்டொறு மெல்குதியே.

(இ - ள்.) வஞ்சிக் கொடியினையொத்த இடையே! தோளினொடு கொங்கையாகிய உறுப்புக்கள் பெருத்தன. பெண்மான் போன்ற கண்கள் மதர்ப்புற்றன. அழகுபொருந்திய அல்குலானது வளர்ச்சியுற்றது. அளகமானது திப்பியமணங் கமழப்பெற்றது. நிறத்தோடு கூடிய தளிரின் அழகை மேனியானது கவர்ந்தது. (இவ்வுறுப்புக்கள் யாவும் என்னைக் கண்டு பொலிவுறபெற) நினக்கு என்னைக் காண்டோறு முளவாகிய வேறுபாடென்னையோ? மெலிதற்குக் காரணங் கூறுவாயாகவென அணையாநிற்றல்.

(வி - ம்.) விழிக்கண் - விழியாகிய கண் : இருபெயரொட்டு. காண்டொறு மெல்குதி என இயைக்க. ஏனைய உறுப்புக்கள் என்னைக் கண்டு சீரித்திருப்ப நீ மாத்திரம் வாட்டமுறுதற்குக் காரணமென்னை யென்பது குறிப்பெச்சம். திரு - அழகு. குரு - நிறம். மாமை - அழகு. விருத்தம் - வேறுபாடு. மருங்குல் - அண்மைவிளி. கமழ்ந்த தென்பதில் துவ்வீறு விகாரத்தாற் றொக்குக் கமழ்ந்தவென
நின்றது.

மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : சார்தல்.

(305)