பக்கம் எண் :

1068தணிகைப் புராணம்

மணந்த தலைவன் மகிழ்சிறந் துரைத்தல

அஃதாவது தலைவியைக்கூடிய தலைமகன் தனக்கவள் உதவிய இறுதியிலின்பத்தினை மகிழ்ந்து மதியம் அமிழ்தம் தரினும் உயிர்நிலை பெறுதற்கேதுவாகிய அமிழ்தினை மந்தரமலைபயிலாத கடல்தரினும் அவ்விரண்டும் இத்தலைவியை யொவ்வா, மதியமிர்தினை நுகருஞ் சகோரமும், கடலமிழ்தினை நுகரும் தேவரும் எனையொப்பாகார் எனப் புகழ்ந்து கூறாநிற்றல்.

 கலைமுற் றமிழ்தந் தரினுங் களங்க மதியுமுயிர்
 நிலைமுற் றமிழ்தந் தரினு நெடுவரை வாய்ப்பயிலா
 அலைமுற் றமிழ்தக் கடலுமொவ் வாவணிப் பூண்முலையைச்
 சிலைமுற் றியவெனை நேரார் சகோரமுந் தேவருமே.

(இ - ள்.) தன் நிறைந்த பதினாறு கலைகளிலுள்ள அமிழ்தத்தைத் தந்தாலும், தன்பாற் களங்கத்தினைக்கொண்ட வெண்கதிரும், உயிர்நிலை பெறுதற்கேதுவாகிய அமிழ்தத்தினைத் தந்தாலும் நீண்டமந்தரமலை தன்னிடத்துப் பயிலப்பெறாத அலைகள் நிறையப்பெற்ற அத்திருப்பாற் கடலும், அழகிய பூணினையணிந்த தனங்களையுடைய தலைவிக்கு ஒப்பாக மாட்டா. சிலைத்தொழில் முற்றுப்பெற்ற என்னை அவ்வெண்கதிர்க் கடவுண்மாட்டு அமிழ்துண்ணும் சகோரப்பறவையும் அக்கடலமிழ் துண்ணுந் தேவர்களும் ஒவ்வார்களென்க.

(வி - ம்.) கலைமுற்றும் என்பதில் உம்மை விகாரத்தாற்றொக்கது, நிலைமுற்றமிழ்தந்தரினும் பெயரெச்சத்திறுதி தொக்கது. "புகழ்புரிந் தில்லிலோர்க்கில்லை" என்றாற்போலக் கொள்க. பூண்முலை : அன்மொழித் தொகை. தேவருஞ் சகோரமுந் திணை விரவி உயர்வான் உயர்திணை முடிபேற்றன. சிலை : ஆகுபெயர். தொழிலுணர்த்தியது. முற்றிய - கைபோய. பயிலாத கடலென இயைக்க.

வெண்கதிர் நாடோறுங் கலைவளர்ந்து கலைக்குத்தக இறப்பச் சிறிய இன்பினையும், கலைநிறைவுற்ற காலத்துப்பேரின்பினையும் தருங்குணமுடைய னாகையால் நான்கூடிய ஞான்றெல்லாம் ஒரே தன்மைத்தாகிய இறுதியிலின்பினை நல்கும் தலைமகட்கு, கலைகள் குறைவும் நிறைவும் பெற்று வேறுபாடுற்ற இறப்ப இழிந்த இன்பினை நல்கும் வெண்கதிர்க் கடவுளை உவமைகூறலடா தென்பான் "மதியு மொவ்வா" வென்றான். கலைநிறைந்து கவினுற்ற வெண்கதிர் நிறைந்த இன்பளித்தலின் உவமை கோடலான்வரும் ஏதம் என்னையெனின் உளத்திற்களங்கம் வைத்துத் தன்னை யடைந்தார்க்கு இன்பினை அற்றைப் பரிசங்கொள்ளும் விலை மாதர்போலத் தன்னையடைந்தார்க்குக் களங்கமில் இன்பினை அளியாமை கருதி "கலைமுற் றமிழ்தந் தரினும் களங்க மதியு மொவ்வா" தென்றனன்.

நெடுவரை தன்னிடத்துப் பயின்று கடையாத காலத்துக் கடலமிழ் தந்தருதல் அரிதாகலின் அவ்வமிழ்தினை யடையக்கருதித் தேவர்கள் குழுமிய காலத்தெல்லாம் அப்பாற்கட லமிழ்தந் தாராமையின் தலைவி யானவளையடுத்த ஞான்றெல்லாம் எனக்கவள் இறுதியிலின்பந்தருதலின் "அலைமுற்றமிழ்தக் கடலுமொவ்வா" என்றனன். நான் தலைவியின் மாட்டுப்பெற்ற இறுதியிலின்பினை வெண்கதிர்மாட்டும், கடலின்மாட்டும்