பக்கம் எண் :

களவுப் படலம்1069

சகோரமுந்தேவரும் பெற்றிலாமையின் "சிலைமுற்றியவெனை நேரார் சகோரமுந் தேவருமே" என்றனன். மெய்ப்பாடு : உவகை. பயன் : நயப்புணர்த்தல்.

(306)

தலைவன் விடுத்தல்

அஃதாவது மகிழ்சிறந்து புனைந்துரைகூறிய தலைவன் தலைவியை வாயாகிய பவளமும், நகையாகிய முத்தும், சுலவும் கண்ணாகிய கயலும், கூந்தலாகிய சைவலமும் எவ்விடத்துங் காணப்பெற்றுச் செல்கின்ற ஆயமாகிய கடலுள் கொடிபோல்பவளே நிறைமதிபோலச் செல்கவென விடுத்தல்.

 செவ்வாய்ப் பவளமும் வெண்ணகை முத்துந் திரிந்துகொட்கும்
 அவ்வா ளரிக்கட் கயலு மடர்குழற் சைவலமும்
 எவ்வாயுந் தோன்ற வியலுநின் னாய மெனுங்கடலுள்
 ஒவ்வா வுவவு மதிபோற் புகுதக வொண்கொடியே.

(இ - ள்.) ஒளிபொருந்திய மலர்க்கொடி போன்ற தலைவியே! செவ்விய வாயாகிய பவளமும், வெள்ளிய பற்களாகிய முத்தும், சுற்றிச் சுழலுகின்ற அந்த ஒளியுள்ள வரிகளையுடைய கண்களாகிய மீனங்களும், குழலாகிய பாசியும், எல்லாப் பக்கங்களிலுந் தோன்ற இயலுகின்ற நினது ஆயக்கூட்டமாய கடலுள் உவாமதிபோலப் போய்ப் புகுதகவென்க.

(வி - ம்.) கொடியேதகப் புகுவாயென்க. எவ்விடத்தும் தோன்ற இயலுகின்ற ஆயக்கூட்டமாகிய கடலென்க. திரிந்து கொட்குங்கயலென வியைக்க. கடலென்றதற்கேற்ப உருவகஞ்செய்தனர். கொட்கும் - சுழலும். மெய்ப்பாடு : பெருமிதம். பயன் : புறத்தாரறியாமைப் பிரிதல்.

(307)

தலைவியைப் பாங்கி சார்தல்

அஃதாவது தலைமகனைப்பிரிந்த தலைமகள் பூக்கொய்யாநின்றாளாக அவளை நோக்கிக் கொடியின்கண்ணுள்ள மலர்களையும் கோட்டின்கண்ணுள்ள மலர்களையும், தளிருந்தீண்டிற் குழைகின்ற வளையலணிந்த நின்கரங்கள் அவைகளைத் தூக்குதல்செய்து பறித்தற்கியலுமோ, அனிச்சமலர் படினும் வாடுதல்செய்யும் சிலம்பணிந்த பாதத்தையுடைய பாவை போல்பவளே! இங்கே நின் நெருங்கிய கரியகூந்தலினுக்கு வாசனையுள்ளனவற்றை யாராய்ந்து கொணர்ந்தேன் சூடுவாயாக வெனக் கூறாநிற்றல்.

 கொடியவுங் கோட்டவும் பல்லவந் தீண்டிற் குழைதருநின்
 தொடியவுந் தூக்கிப் பறிப்பன வோதுக டீரனிச்சம்
 படியவுஞ் சாயு மணிநூ புரப்பதப் பாவையிங்கே
 கடியவுந் தேர்ந்து கொணர்ந்தேன் செறிந்த கருங்குழற்கே.

(இ - ள்.) மணிகள்பதித்த பாதசரங்களையணிந்த கால்களையுடைய பாவைபோல்பவளே! கொடியின்கண்ணுளவாகிய மலர்களையும், கோட்டின் கண்ணுளவாகிய மலர்களையும் தளிர்கள் தீண்டினும் வாட்டமுறு