| எழுக வென்றுதன் னியலுருத் தோற்றின் னிறைவன் | | தொழுது நாயக தொன்றெலா முஞற்றிய பிழைகள் | | முழுது நின்பணி யாக்கென மொய்குழன் மகிழ்ந்தாள் | | பழுது தீர்ந்தெழு வேடரும் பணிந்தனர் மொழிவார். |
(இ - ள்.) அங்ஙனமே அவ்வேடர் உயிர் பெற்றெழுக வென்று திருவாய் மலர்ந்தருளி எம்பெருமான் தன்னியற்கைத் திருவுருவத்தைக் காட்டினன். எம்பெருமான்றிருவுருக் காட்சிபெற்ற வள்ளி நாயகியார் பேரின்பமெய்திக் கைகூப்பித் தொழுது பெருமானே பண்டெலாம் யான் செய்த பிழைகள் அனைத்தையும் நின் வழிபாடாக ஏற்றருள்க என்றனர். குற்றந்தீர்ந்து உயிர் பெற்றெழுந்த வேடரும் வணங்கிப் பின்வருமாறு விண்ணப்பஞ் செய்யா நின்றனர். (வி - ம்.) இயலுரு - முருகப்பெருமான் திருவுருவம். உஞற்றிய - செய்த. மொய்குழல் : அன்மொழித்தொகை; வள்ளி. (634) வேடர் முருகப்பெருமானை வேண்டிக்கோடல் | காக்கும் வேலியே பயிரினை மேய்வது கருதின் | | ஆக்க வேறொரு காப்புமுண் டேநின தருளால் | | தேக்கும் வண்புகழ்ச் சிறுகுடி மரபினை நீயே | | தாக்கும் புன்மொழி வளர்ப்பது தக்கதோ வன்றே. |
(இ - ள்.) எம்பெருமானே? காக்குமியல்புடைய வேலியே பயிரினை மேய நினையின் அஃதழியாமற் செய்யப் பிறிதொரு காவலு முண்டாமோ? நின்னுடைய திருவருள் வலத்தாலே புகழ் வளர்க்கும் சிறுகுடியோமாகிய எம்முறையினை நீயே கெடுக்குமொரு பழியை நீ வளர்ப்பது தகுதியுடையதோ? (வி - ம்.) காப்பு - காவல். சிறுகுடி - குறிஞ்சி நிலக்குடி. அன்றும் ஏயும் அசைகள். (635) | அருள தாய்விடி னடியரேஞ் செய்வதெ னினியோர் | | கருமம் வேண்டுவ துளதது வென்னெனிற் கமலத் | | திருவின் மேலவ டன்னையாஞ் செழும்புனல் வாக்கித் | | தருத லெம்பிரான் றனிமணம் புரிவதென் றிசைத்தார். |
(இ - ள்.) எம்பெருமான் திருவருட் குறிப்பு அஃதேயாகிவிடின் அடியேங்கள் அக்குறிப்புக் கெதிராகச் செய்வதியாது? இனி அடியேங்கள் பெருமான்பால் வேண்டும் வரம் ஒன்றுளது; அஃதியாதென்னின், செந்தாமரை மலர் மேலுறையுந்திருமகளினுங்காட்டிற் சிறந்த எம் வள்ளியை யாங்கள் சிறந்த நீர்வாக்கியளிப்ப எம்பிரான் ஒப்பற்ற திருமணம் புரிந்துகோடல் என்பதாம் என்று கூறினர். (வி - ம்.) அருள் - திருவுளக்குறிப்பு. கமலம் - தாமரை. (636) |