| களித்த மாதராள் கதிர்முக நோக்கியக் கள்வன் | | சுளித்து மேல்வருந் தொடுகழல் வேடர்தம் மாவி | | விளித்து வீழ்த்தின மேவுதுந் தணிகையங் குன்று | | தளித்த தேந்தொடைந் தாழ்குழா லெனவுட னெழுந்தாள். |
(இ - ள்.) எம்பெருமான் மகிழ்ச்சியுற்ற வள்ளிநாயகியாரின் ஒளி படைத்த திருமுகத்தை நோக்கித் தேன்றுளித்த மலர் மாலையையுடைய தாழ்ந்த கூந்தலையுடையோய்! சினந்து நம்மேற் போரிடற்கு வந்த கழல் கட்டிய வேடருடை உயிரைப்போக்கி வீழ்த்திவிட்டோம். இனி யாம் திருத்தணிகை மலைக்குச்செல்வேம் என்று திருவாய் மலர்ந்தருளியவுடன் மகிழ்ந்து புறப்பட்டார். (வி - ம்.) கள்வன் என்றது - முருகப்பெருமானை. தளித்த - துளித்த. தாழ்குழால் : விளி. (628) | ஆய வேலையி லன்றவ ளழகெலாந் தெரித்துத் | | தூய சீபரி பூரணத் தொல்வரை நோற்றல் | | மேய நாரத மெய்த்தவன் விளைவெலா மோர்ந்து | | மாய வேட்டுவக் குமரன்முன் வல்விரைந் தடுத்தான். |
(இ - ள்.) அவ்வாறு நிகழ்கின்ற பொழுது பண்டு அவ்வள்ளி நாயகியாரின் அழகெல்லாம் எம்பெருமானுக்குக் கூறித் தூயதான சீபரி பூரணம் என்னும் அப்பழைதாகிய திருத்தணிகை மலையின்கண் தவஞ் செய்திருந்த நாரதன் என்னும் மெய்யாய தவத்தையுடையோன் இந் நிகழ்ச்சிகளை எல்லாம் தன் அவதி ஞானத்தானே வுணர்ந்து பொய்யாக வேட்டுவனாய் நடிக்கும் எம்பெருமான் முன்னர் மிக விரைந்து வந்து சேர்ந்தான். (வி - ம்.) அன்று - பண்டு. மாயம் - பொய். (629) | வலம்பு ரிந்தனன் வணங்கினன் வழுத்தின னின்றான் | | புலம்பு ரிந்தருள் புள்ளுவன் புன்னகை முகிழ்த்தான் | | நலம்பு ரிந்தவேட் டுவக்குல நங்கையுண் மருண்டாள் | | நிலம்பு ரிந்தமா தவமனை யவட்கவ னிகழ்த்தும். |
(இ - ள்.) வந்து சேர்ந்த நாரதமுனிவன் எம்பெருமானையும் வள்ளிநாயகியாரையும் வலம் வந்து அடிகளில் வீழ்ந்து வணங்கினன்; எழுந்து வாழ்த்தி நின்றனன். உயிர்கட்கு அறிவினை விரும்பியருளா நின்ற அம் மாயவேட்டுவனாகிய எம்பெருமான் புன்னகை பூத்தனன். நன்மையாகிய தவத்தினைச் செய்த அக்குறவர் குலக்கொடியாகிய வள்ளி நாயகியார் நெஞ்சம் மருண்டனர். அங்ஙனம் மருண்ட இவ்வுலகம் செய்த தவத்தின் பயனேபோலும் அவ்வள்ளிநாயகியார்க்கு அம் முனிவன் (பின்வருவாறு) கூறுவான். (வி - ம்.) புரிந்தனன், வணங்கினன், வழுத்தினன் என்பன முற்றெச்சங்கள்; புலம் - அறிவு. புரிந்து - பக்குவமறிந்து எனினுமாம். (630) |