பக்கம் எண் :

1254தணிகைப் புராணம்

 தேன்ற லைப்பொடித் தொழுகிய தீம்பொழிற் கள்வன்
 ஊன்ற லைப்பொடித் தொளிர்குரு குறவுளம் வைத்தான்.

(இ - ள்.) ஆனினது தலையிலே முளைத்தெழா நின்ற கொம்பிற்குப் புலிதான் அஞ்சுவதுண்டோ? முல்லைக்காட்டிலே தோன்றி எழா நின்ற வேய்ங்குழல் போலும் இனிய மொழியினையுடையாய் நீ அஞ்சாதே கொள்! என்று வள்ளியைத் தேற்றி தேனினைத் தந்தலையிலே தோற்றுவித்து ஒழுகா நின்ற இனியவப் பொழிலின்கண் கள்வனாகிய எம்பெருமான் ஊன்றலையிலே தோன்றிக் கொண்டையாக எழுகின்ற தனது கோழிச்சேவல் அவ்விடத்தே வருமாறு திருவுளத்தே
குறித்தனன்.

(வி - ம்.) பொடித்தல் - முளைத்தல். கான் - முல்லைக்காடு. கான் - மணம் எனக்கொண்டு அதற்கியையக் கூறினுமாம்.

(625)

 முறஞ்செ விப்பெரு வாரணத் திளையவன் முன்னர்ப்
 புறஞ்சி றைச்சிறு வாரணப் புள்ளெழுந் தார்ப்ப
 அறஞ்செ யப்பெரும் பாவங்க ளழிந்தென வாங்கே
 மறஞ்செ யப்புகுந் தாரெலா மறிந்துவீழ்ந் துலந்தார்.

(இ - ள்.) முறம் போன்ற செவியினையுடைய பெரிய யானைமுகக் கடவுளின் தம்பியின் முன்னர்ப் பக்கங்களிலே சிறகினையுடைய சிறிய கோழிச்சேவல் ஞெரேலெனத் தோன்றி ஆரவாரித்தவளவில், ஒருவன் அறஞ்செய்துழி அவன் முன்னர்ப் பாவங்கள் அழிந்தொழிந்தாற் போன்று அவ்விடத்தே போர் செய்யத் தொடங்கிய குறவர் அனைவரும் இறந்து வீழ்ந்தனர்.

(வி - ம்.) முறஞ்செவி : உவமத்தொகை. பெருவாரணம் என்றது யானை முகனை. சிறுவாரணம் என்றது கோழியை. மறம் - போர்.

(626)

 புள்ள டுத்தது மார்த்ததும் புளிஞர்க ளாவி
 விள்ள டுத்ததும் விம்மிதம் விளைப்பமெல் லியலாள்
 உள்ள டுத்தபே ரோகைய ளொளிமுக மலர்ந்தாள்
 தெள்ள டுத்திலள் கணவனார் திருவிளை யாட்டில்.

(இ - ள்.) கோழிச்சேவல் ஆரவாரித்ததும் வேடர்கள் உயிர்போக நேர்ந்ததுமாகிய கணவனாருடைய திருவிளையாடல் மெல்லியலையுடைய வள்ளிநாயகியார்க்கு விம்மிதத்தை உண்டாக்குதலானே நெஞ்சினுள்ளே பெரியதோர் உவகையுடையராய் ஒளியுடைய தமது முகமலரப் பெற்றார் இந்நிகழ்ச்சிகளைப் பற்றிய தெளிவுயாதும் பெற்றாரில்லை.

(வி - ம்.) புளிஞர் - வேடர். விள்ள என்பது ஈற்றுயிர் கெட்டது. அடுத்ததும் - நேர்ந்ததும். விம்மிதம் - மருட்கை. தெள் - தெளிவு. இச்செயல் அவர்க்கு இந்திரசாலம் போறலின் தெளிவுண்டாக வில்லை என்பது கருத்து.

(627)