பக்கம் எண் :

138தணிகைப் புராணம்

 சொற்சு ருக்கியுஞ் சுட்டிக் கூறியும்
 விற்கு மாவணம் விளம்பி னாமினிப்
 பொற்ப யாவரும் புகன்று வாழ்தரும்
 பற்பல் வீதியும் பகர லுற்றனம்.

(இ - ள்.) வினாவியவற்றுக்கு விடை சொற் சுருங்குமாறு கூறியும் இன்ன பொருள் உண்டு என்று உள்ள பொருளைச் சுட்டிக்கூறியும் பொருள்களை விற்கும் வணிகர் கடைவீதியின் சிறப்பைக் கூறினோம். இனி, அழகாக எல்லாரும் விரும்பி வாழ்கின்ற பலவகைப்பட்ட தெருவின் சிறப்பினையும் கூறத்தொடங்குவோம்.

(வி - ம்.) சுருக்கல் - குறித்த பொருளை விளக்கவேண்டுஞ் சொற்களிற் சுருங்கச் சொல்லுதல். சுட்டிக் கூறுதல் - தம்பாலுள்ளனவாயின் இவ்வளவின தல்லதில் லெனக்கூறல். புகன்று - விரும்பி.

(99)

வேறு

 கோளகர் வகுப்புங் குண்டகர் வகுப்புங்
 குலாவுறும் விராத்தியர் வகுப்பும்
 தாளுறு மந்த ராளர்தம் வகுப்புந்
 தகும்பிரதி லோமர்கள் வகுப்பும்
 ஆளுறு மனுலோ மர்கள்பெரு வகுப்பும்
 அவ்வவ வினங்கள்வே றமைந்து
 நாளுமின் புகப்பத் தத்தம தியல்பி
 னண்ணிவாழ் வீதிக ளனந்தம்.

(இ - ள்.) (கைம்மை பெற்றோர்களாகிய) கோளகருடைய பகுதியும் (தன்னாயக னிருப்ப வேறாடவர்க்குப் பெற்ற பிள்ளைகளாகிய) குண்டகர்களுடைய பகுதியும் (அனுலோமப் பெண்ணும் பிரதிலோமத்தாணும் கூடிப் பெற்ற பிள்ளைகளாகிய) விளங்குகின்ற விராத்தியர்களுடைய பகுதியும் (அனுலோமத்தாணும் பிரதிலோமப் பெண்ணும் கூடிப்பெற்ற பிள்ளைகளாகிய) முயற்சியுள்ள அந்தராளருடைய பகுதியும், (உயர்குலப் பெண்ணும் இழிகுலத்தாணும் கூடிப்பெற்ற பிள்ளைகளாகிய) தகுதியையுடைய பிரதிலோமர்களுடைய பகுதியும், (உயர்குலத்தாணும், இழிகுலப்பெண்ணும் கூடிப்பெற்ற பிள்ளைகளாகிய) அடிமைகளாகப் பொருந்திய அனுலோமர்களுடைய பெரிய பகுதியுமாகிய அவ்வக் கூட்டங்கள் வெவ்வேறாகப் பொருந்தி யொவ்வொருநாளு மின்பமதிகரிப்பத் தத்தமக்குரிய இயல்போடு கூடிப் பொருந்தி வாழ்கின்ற வீதிகள் பலவாம்.

(வி - ம்.) "முன்னிய கைம்மை பெற்றோன்" "உயர்ந்தநாற் குலத்திலாண்பெண்" "பெருத்தஅவ் வனுலோமன்னே" எனவரும் நிகண்டுச் செய்யுட்களான் இவற்றின் விரிவை யுணர்க. தாளுறு - முயற்சியுற்ற. ஆளுறு - அடிமையாகப் பொருந்திய. உயர்குலப் பெண்ணும் இழிகுலத்தாணுங் கூடிப் பிறந்தவன் பிரதிலோமன்.

(100)