பக்கம் எண் :

சீபரிபூரண நாமப் படலம்775

(இ - ள்.) யானைகளும், வெற்றியினையுடைய குதிரைகளுமாகிய யாவையு மிறந்தன. ஒளிபொருந்திய மணிகள்பதித்த தேர்த்தொகைகளு முரிந்தன. தீப் படர்ந்ததுபோலப் படர்ந்து வந்து எதிர்த்துப் போர் செய்த அவுணர்பலர் இறந்தனர். இறவாது பிழைத்த சிலர் ஓடி உய்ந்தனர். கீற்றுக்கள் தங்கப்பெற்று விளங்குகின்ற புலிமுக னென்பான் கண்ணுற்று வலியமைந்த சூலமொன்றினைக் கையாற் கொண்டவனாகிப் பொருந்தினான். பெரிய தகுதிப்பாட்டினையுடைய பூதகணங்கட்குத் தலைவனாகிய சிங்கனென்பவன் பெரிய சூலப்படை யொன்றினைக் கையின்கட்பற்றி அப்புலிமுக னென்பானோடு எதிர்த்தன னென்க.

(வி - ம்.) வரி - கீற்று. சிங்கன் - வீரர்சேனைத் தலைவன்.

(371)

 குத்தி னாரெதி ரெதிருட லுருவக்
           குருதி தாரையிற் பாய்ந்துகப் புய்த்தார்
 வைத்த சூலங்க ளிறுதலு முழங்கி
           மல்லுப் போரினை வயக்கின ராங்குப்
 பைத்த பாரிடைப் புலிமுகன் வீழ்ந்தான்
           பதத்தி னாலிறச் சவட்டினன் சிங்கன்
 மொய்த்த பூதர்கண் மதின்முழு தழித்து
           முந்து கோபுரம் பெயர்த்தகத் தெறிந்தார்.

(இ - ள்.) உடலின்கண் ணூடுருவிச் செல்ல எதிரெதிர் நின்று ஒருவரையொருவர் குத்தினர். செந்நீர் மழைத் தாரைபோலப் பாய் தலைச்செய்து சிந்தச் சூலப்படையினைப் பிடுங்கினர். தாங்கள் கையின்கண் வைத்திருந்த சூலப்படைகள் ஓடிய இருவரும் வீரமுழக்கஞ்செய்து மற்போரினைச் செய்தனர். அஞ்ஞான்று படைவீரர்கள் பரவிநின்ற பறந்தலைக்கண் புலிமுகனென்பான் வீழ்ந்தனன். சிங்கனென்னுந் தலைவன் காலால்மிதித்து அவனைக் கொன்றனன். அப்போர்க்களத்தின்கண் செறிந்த பூதவீரர்கள் மதின்முற்றிலு மழித்து முதற்றடையின்கண்ணுள்ள கோபுரத்தைப் பெயர்த்தலைச் செய்து நகரினகத் தெறிந்தன ரென்க.

(வி - ம்.) புய்த்தல் - பிடுங்கல். இதனைக் "கோடுபுய்க்கல்லாதுழக்கும் நாடகேள்" என்னும் கலியடியா னுணர்க.

(372)

 மாளி கைக்குலந் துகைத்துநீ றாக்கி
           மறுகி னேர்ந்திடுந் தானவர்ச் செகுத்துச்
 சூளி கைக்குல மகழ்ந்தெறிந் தட்டுத்
           துளங்கப் பூதர்கள் பேரொலி யெழுப்ப
 வேளி ருங்கழற் பணிபுரி வீர
           வாகு காலழற் படையொருங் கெடுத்து
 நீளு மிந்நக ருண்கென விடுத்தா
           னிமிரிந்த வப்படை நெளிந்தன வுலகம்.