(இ - ள்.) மலைதோறும் தேவர்கள் வளமெல்லாம் நிறைந்துள்ள காட்சி எம்பெருமானாகிய முருகக்கடவுள் எழுந்தருளிய திருத்தணிகை மலையின்கண் முதன்மையுடைய பலவாகிய வளத்தைத் தாமும் நிகர்த்தல் வேண்டி முதிர்ந்த தவஞ் செய்திருத்தலை ஒத்தது. இனி அத்தணிகை வளத்தைக் கண்டஞ்சி வளமெலாம் மலைதொறுஞ் சென்று மறைந்துள்ளன என்றலும் ஆம். (வி - ம்.) கந்தரம் - மலை. கஞலுதல் - நிரம்பியிருத்தல். புத்தேள் - தெய்வம். அந்தில் - அவ்விடத்துள்ளதோற்றம் தவம்புரிவது போன்றது. பின்னும் அஞ்சிக் கரந்ததும் போன்றது என்க. (613) | தீயவர் புரத்திற் பட்ட செயிர்கழீஇப் புனித மெய்த | | ஆயிடை வதிதல் போல வமரர்கள் வெறுக்கை முற்றும் | | பாயின வண்ணஞ் சொற்றாம் பங்கயன் முதலோர் யாரும் | | மேயினர் தவங்க ளாற்றி மீட்டனர் போதல் சொல்வாம். |
(இ - ள்.) தேவர்கள் செல்வமனைத்தும் தீயோராகிய அசுரர் நகரத்தின்கட் கிடந்தமையானே தமக்குண்டாய குற்றத்தைப்போக்கித் தூய்மை பெறுதற்குக் கருதி அத் திருத்தணிகைமலையின்கண் வந்து பரவிய தன்மையை இதுகாறுங் கூறினேம். இனி, பிரமன் முதலிய தேவர் பலரும் அத்திருத்தணிகைமலையினை எய்தித் தவம்பல செய்து மீண்டு போதலைக் கூறுவேம் கேண்மின். (வி - ம்.) தீயவர் - அசுரர். செயிர் - குற்றம். புனிதம் - தூய்மை. வெறுக்கை - செல்வம். பாயின - பரவிய. சொற்றாம் - கூறினேம். மேயினர், மீட்டனர் இரண்டும் முற்றெச்சம். இது சூதமுனிவர் கூற்று. (614) சீபரிபூரண நாமப் படலம் முற்றிற்று. (ஆகத் திருவிருத்தம் - 2000) |