பக்கம் எண் :

பிரமனருள் பெறு படலம்869

பிரமனருள்பெறு படலம்


 பூமகள் களிதூங்கப் போர்மகள் குறைநீங்க
 நாமக ணலனெய்த நல்லருட் கிடனாப
 காமரு சுதைமேனிக் கலைமகள் வழிபட்ட
 வீமலி நறுங்கொன்றை விமலனை நினைவோரே.

(இ - ள்.) விரும்புதற்குக் காரணமான வெண்மேனியையுடைய நாமகள் வழிபாடு செய்த நறியகொன்றை மலர்மாலை மிக்கு அணிந்த தூய சிவபெருமானை நினைபவர், தம்பால் நிலமகள் மகிழ்ச்சி மிக்கிருப்பவும், புகழ்மகள் குறைநீங்கி நிரம்பவும், கலைமகளின் நலனெல்லாம் கைகூடவும் எம்பெருமானுடைய நன்மையான திருவருட்கு உறைவிடமாகுவர்.

(வி - ம்.) பூமகள் - திருமகளுமாம். போர்மகள் - புகழ். குறை நீங்க என்றது. நீங்கி நிரம்ப என்றவாறு. ஆப - பலர்பாலறிசொல். சுதை - வெண்மை. விமலன் - சிவபெருமான். கொன்றை வீமலி விமலன் எனக் கூட்டுக. வீ - மலர்.

(1)

வேறு

 முறுக்கவிழ் நறைக்கமல மூரியணை மேலான்
 ஒறுக்குமவு ணக்களையொ ழித்தயர்வு யிர்த்து
 நிறுக்குநிறை செல்வமொடு நீடுலகி ருந்தான்
 இறுக்குமெறு ழாய்தமுதல் யாவுமுற வெண்ணி.

(இ - ள்.) முறுக்குடைந்து மலர்ந்த தேன்பொருந்திய தாமரை மலராகிய பெரிய அணையின்மிசை வீற்றிருக்கும் பிரமதேவன், தன்னைத் துன்புறுத்தும் அசுரராகிய களைகள் ஒழிந்தமையானே வருத்தந்தீர்ந்து நிறுத்தற்குக் காரணமான நிறைந்த செல்வத்தோடு தனது நெடிய வுலகிலே இருப்பவன், கொல்லுதற்குரிய வலிமையுடைய படைக்கலன் முதலியவற்றைப் பெறுதற்குக் கருதி.

(வி - ம்.) நறை - தேன். மூரி - பெருமை. ஒறுக்கும் - துன்புறுத்தும். இறுக்கும் - கொல்லும். ஆய்தம் : விகாரம்.

(2)

 அலத்தகம ணிந்தழகெ றிக்குமடி வாணி
 நலத்தகவி ழைந்துடன டப்பவவ ணீங்கிக்
 குலத்தமிழ்வ ழங்குகுவ ளைக்கிரிகு டக்கர்
 நிலத்தின்முனி ருத்திமகிழ் நின்மலனை யண்மி.

(இ - ள்.) செம்பஞ்சுக் குழம்பூட்டப்பட்டு அழகான் மிளிரும் அடிகளையுடைய நாமகள் நலம் தகுதிபெற விரும்பித் தன்னோடு வரத் தனது உலகினின்றும் புறப்பட்டு உயர்தனிச் செம்மொழியாகிய தமிழ் வழங்கா நின்ற திருத்தணிகை மலையின் மேற்றிசைக்கண் அந்நாமகளை இருப்பித்து, இறைவன் திருமுன் சென்று,