பக்கம் எண் :

870தணிகைப் புராணம்

(வி - ம்.) அலத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு. வாணி - கலைமகள். குலம் - உயர்வின் மேற்று. குவளைக்கிரி - திருத்தணிகை.

(3)

 பூசனைபு ரிந்துபுக ழோங்கியவீ ராட்ட
 காசமவி ரீசர்கழல் காதலின்வ ணங்கிக்
 கூசலன சங்கடர்கு மாரதிருத் தம்புக்
 காசகல வாடியணி மால்வரையி வர்ந்தான்.

(இ - ள்.) வழிபாடாற்றிப் புகழ்மிகுந்த வீராட்டகாசத்தே விளங்கா நின்ற பெருமானுடைய திருவடிகளைப் பேரன்போடு வணங்கிப் பின்னர் கூச்சலிடுவனவாகிய சங்குகள் மிக்க குமார தீர்த்தத்திலே புகுந்து உடல் அழுக்கும் நெஞ்சழுக்கும் அகல நீராடி அழகிய பெரிய திருத்தணிகை மலையின்மிசை ஏறினன்.

(வி - ம்.) அவிர் - விளங்காநின்ற. கூசலன, கூச்சலன - கூச்சலையுடையன. ஆசு - அழுக்கு. மால் - பெரிய.

(4)

 அருக்கர்பதி னாயிரவ ராங்கொருவ ரைப்பின்
 ஒருக்குறையி னும்பொருவு றாதசுடர் வேல்கொண்
 டிருக்குமரு ளெந்தையெதிர் தாழ்ந்தனனெ ழுந்தான்
 திருக்கறுமு ளக்கசிவு தேக்கிவலம் வந்தான்.

(இ - ள்.) பதினாயிரம் ஞாயிற்று மண்டிலம் ஒருவழித் தொக்கிருந்தாலும் நிகராகாத பேரொளியோடே வேற்படையேந்தி வீற்றிரா நின்ற முருகப்பெருமான் திருமுன் சென்று வணங்கி எழுந்து. மனக்குற்றம் அகலுதற்குக் காரணமான அன்பினைப் பெருக்கி அத்திருமலையை வலம் வந்தனன்.

(வி - ம்.) அருக்கர் - ஞாயிறுகள். ஒருக்கு - ஒருங்கு. தாழ்ந்தனன் எழுந்தான். முற்றெச்சங்கள் : உளக்கசிவு - அன்பு.

(5)

 ஆலய நுழைந்துமுறை யானணிய னாகி
 மூலவச லத்திறையை மூலமல நாசக்
 காலனைவ ணங்கினவர் காலன்முறை யஞ்சா
 வேலவனை வித்தகனை வீழ்ந்துதரி சித்தான்.

(இ - ள்.) வலம் வந்து திருக்கோயிலின் கண் நுழைந்து நூல் கூறிய முறையானே அணுகியவனாய் மூலமலைமேல் எழுந்தருளியிருப்பவனும், இறைவனும், ஆணவமலத்தை அழிக்கும் கூற்றுவனும் தன்னை வணங்கிய மெய்யன்பர் கூற்றுவன் ஒறுத்தற்கு அஞ்சாமைக்குக் காரணமான வேற்படையுடையோனும் புலமையுடையோனும் ஆகிய முருகப்பெருமான் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கிக் கண்டனன்.

(வி - ம்.) முறை - நூன்முறை. மூலவசலம் - தணிகைமலை. மூலமலம் - ஆணவம்.

(6)