| அன்றையிர வுப்பொழுது வைகவலர் மேலான் | | நன்றுமுன ருந்தவந டாத்தியவ ரைப்பில் | | சென்றுபுன லாடிவினை தீர்க்குமணி மாலை | | மன்றல்கமழ் நீறுடல்வ யக்கினன ணிந்தான். |
(இ - ள்.) அற்றைநாள் இரவு கழியா நிற்ப மறுநாள் அப்பிரமதேவன் முற்காலத்தே பெரிதும் தான் தவம் செய்திருந்த தோரிடத்தே சென்று, நீராடி இருவினைகளையும் தீர்க்குங் கண்மணி மாலையினையும் மணங்கமழாநின்ற திருநீற்றினையும் தனது மேனியை விளக்கியவனாய் அணிந்துகொண்டனன். (வி - ம்.) வைக - கழிய. அலர்மேலோன் - பிரமன். நன்று. பெரிதும். மணிமாலை -கண்மணிமாலை. மன்றல் - மணம். (7) | தடாதபொறி யைந்துமெறுழ் சாயவிறை கோலம் | | விடாதுளமி ருத்திவிறன் மந்திரந வின்று | | வடாதுதிசை நோக்கிவரை யாதனமி ருந்து | | கெடாதபய னல்குகிளர் மாதவமு ழந்தான். |
(இ - ள்.) தடை செய்தற்கியலாத ஐம்பொறிகளும் வலிகெட்டழிய எம்பெருமானுடைய திருமேனியழகினை இடையறாது நெஞ்சத்திலே நிலைநிறுத்தி வெற்றிதரும் ஆறெழுத்துத் திருமந்திரத்தைக் கணித்து வடதிசை நோக்கி நூலான் வரையறை செய்யப்பட்டதொரு இருக்கையிலமர்ந்து அழிவற்ற வீட்டின்பத்தை அளிக்குமியல்புடைய மிகுதலையுடைய பெரிய தவத்தினை ஆற்றா நின்றனன். (வி - ம்.) தடாத - தடுக்கப்படாத. எறுழ் - வலி. வரையாதனம் : வினைத்தொகை. கெடாதபயன் - வீட்டின்பம். (8) | ஏவலினி தாற்றுமெழி னாமகள்வ ணங்கிக் | | காவலனு ளத்திசைவு கண்டுசுனை ஞாங்கர்ப் | | பூவலயம் வான்சுடர்கள் பூண்டுருள வூர்வெல் | | சேவகன ருட்குறியி ருத்தியருச் சித்தாள். |
(இ - ள்.) இவ்வாறு நோன்பியற்றும் பிரமதேவனுக் கயலிருந்து குற்றேவல் இனிதே புரிந்து வருகின்ற அழகிய நாமகள் பிரமதேவனாகிய தன் கணவனுடைய உடம்பாடு பெற்று ஒரு சுனையின் பக்கத்தே, நிலவுலகம் தேராக ஞாயிறுந் திங்களும் உருளாகப் பூட்டி உருளும்படி ஊர்ந்தருளிய வெற்றியையுடைய இறைவனுடைய திருவருட் குறி நிறுத்தி அதன்கண் அப்பெருமானைக் கண்டு வழிபாடியற்றா நின்றனள். (வி - ம்.) காவலன் - கணவன். உளத்திசைவு - உடம்பாடு. ஞாங்கர் - பக்கம். ஊர்வெல் சேவகன் - வினைத்தொகையடுக்கு. (9) | இன்னணம்வி ழைந்திவரி ருந்தவழி யற்றக் | | கன்னியர்ம ருங்கமர்க டம்பணிபு யத்தான் |
|