பக்கம் எண் :

872தணிகைப் புராணம்

 நன்னர்வர நல்கநளி மாமயில்க டாவித்
 துன்னியக ணத்தொகுதி சூழவணு குற்றான்.

(இ - ள்.) இவ்வாறாகப் பெரிதும் விரும்பி பிரமதேவனும் நாமகளும் பெரிய தவத்தினை ஆற்றாநிற்ப, வள்ளியும் தேவசேனையும் இரண்டு பக்கத்தும் வீற்றிருக்கும் கடப்பமாலை யணிகின்ற திருத்தோளையுடைய கந்தவேட் பெருமான் அப்பிரமதேவனுக்கு நன்மை மிக்க வரமருளுதற் பொருட்டுத் தனது பெரிய மயிலினை ஊர்ந்து செறிந்த தனது கணங்கள் புடைசூழ அவன்பால் எழுந்தருளினன்.

(வி - ம்.) இவர் - இப்பிரமனும் நாமகளும். கன்னியர் - வள்ளியும் தேவசேனையும்.

(10)

 கண்டுதொழு துச்சிமிசை கையிணைக ளேற
 மண்டுவகை யுள்ளமெழ வல்லையினெ ழுந்து
 தண்டென விழுந்துதிவ டாண்முடிக டீட்டி
 நுண்டுளிபி லிற்றவிழி நோக்கியய னேத்தும்.

(இ - ள்.) முருகப் பெருமான் எழுந்தருளுதலைக் கண்டு பிரமதேவன், தன் கைகள் எட்டும் தலைமேலெழும்படி குவித்துப் பெருகிய மகிழ்ச்சி உள்ளத்தே பொங்கியெழ விரைந்து எழுந்து தடிபோன்று அவனது விளங்குந் திருவடிகளிலே வீழ்ந்து தனது தலைகளானே அவ்வடிகளைத் தொட்டு எழுந்து நின்று தன் விழிகள் அன்புக் கண்ணீர் துளிப்ப அவ்விறைவனை நோக்கிப் பின்வருமாறு வாழ்த்தாநிற்பன்.

(வி - ம்.) தோள்கள் எட்டும் தலைகள் நான்குமென்பது தோன்ற, கையிணைகள் என்றும் முடிகள் என்றும் பன்மை கூறினர். திவடாள் : வினைத் தொகை.

(11)

 மும்மை மலக்கணத்தின் மோகக் கடலழுந்தி
 விம்மற் பவத்தின் மெலிகின்றார் பல்லோர்
 விம்மற் பவத்தின் மெலிகின்றா ரென்னே
 செம்மற் றணிகைத் திசைநோக்கா வாறே.

(இ - ள்.) உலகிற் பலர் ஆணவ முதலிய மூன்று மலங்களின் திரட்சியாலுண்டான மோகமென்னும் கடலிலே முழுகித் துன்புறுதற் கேதுவான பிறப்பிலே பட்டு வருந்தாநின்றார். என்கொலோ? துன்புறுதற் கேதுவான பிறப்பிலே பட்டு மெலியும் இவர் எம்பெருமான் திருத்தணிகை மலையிருந்த திசையினையும் நோக்காதவாறு.

(வி - ம்.) திருத்தணிகை மலையைக் கண்ட துணையானே பிறவிப்பிணி யொழியும் என்பது கருத்து.

(12)