| நிகழ்பிணிக் கோட்பட்டு நிரயமிது வென்னத் | | திகழிடும்பைச் சேற்றுட் டிளைக்கின்றார் பல்லோர் | | திகழிடும்பைச் சேற்றுட் டிளைக்கின்றா ரென்னே | | பகவன் றணிகை பணியாத வாறே. |
(இ - ள்.) நிகழா நின்ற நோயின் வாய்ப்பட்டு நரகம் இதுவே என்னும்படி விளங்காநின்ற துன்பச் சேற்றுள்ளே முழுகிக்கிடக்கின்றார். இத்தகையோர் எம்பெருமான் வீற்றிருக்கின்ற திருத்தணிகை மலையினை வணங்காதிருத்தல் என்னையோ? (வி - ம்.) திருத்தணிகையை வணங்குவோர் நோய் அகலும் என்றவாறு. (13) | ஒல்லார் நலிய வுரிமைபொரு ளூரொடுந்தோற் | | றல்லாந்து வையத் தலைகின்றார் பல்லோர் | | அல்லாந்து வையத் தலைகின்றா ரென்னே | | வல்லான் றணிகை வழுத்தாத வாறே. |
(இ - ள்.) உலகிற் பலர் தம் பகைவர் தம்மைத் துன்புறுத்த மனைவி பொருள் ஊர் முதலியவற்றை இழந்து மயங்கி அலையாநின்றனர். இவ்வாறு அலைவோர் என்கொலோ எல்லாம்வல்ல முருகக்கடவுள் வீற்றிருக்கின்ற திருத்தணிகைமலையை வாழ்த்தி வணங்காதது. (வி - ம்.) தணிகையை வழுத்துவோர் பகைவர் கெடுவர் என்றவாறு. (14) | வழுத்து நான்முகனை நோக்கி நீலவரை | | வள்ளல் வேட்டவரம் யாதெனத் | | தழைத்த பேரருளி னால்வி னாவவெதிர் | | தாழ்ந்து வேதனனி சாற்றுவான் | | முழுத்த வாண்மைவளர் சூர னெங்களை | | முனிந்து வௌவுவளம் யாவையும் | | பிழைத்தி டாதுகொடு வந்து பன்மணி | | பிறங்கு மிவ்வரையி ருத்தினை. |
(இ - ள்.) இவ்வாறு வாழ்த்தாநின்ற பிரமதேவனை எம்பெருமான் நோக்கிப் பெருகிய பேரருளுடைமையாலே நீ விரும்பிய வரம் யாது என்று வினவியருள, அப்பிரமதேவன் பெருமான் முன் வணங்கிக்கூறுபவன், "தேவ தேவ! முழுமை யெய்திய ஆற்றல் மிகுந்த சூரபதுமன் எளியேமைச் சினந்து கவர்ந்துபோன செல்வம் அனைத்தையும் பெருமான் எஞ்சாமல் மீட்டுக்கொணர்ந்து பலவாகிய மணிகள் ஒளிரும் இத்தணிகைமலையிலே வைத்தருளினை. (வி - ம்.) நீலவரை - தணிகைமலை. வேதன் - பிரமன். முழுத்த - முழுமையுற்ற. (15) |