| சோத்த நின்னடிய னேற்கு நுந்தையரு | | டொல்லை நாள்வளம னைத்தையும் | | யாத்தன் மாதிவள்ப ராப ரன்குறியி | | ருத்தி வந்தனையி யற்றினாள் | | ஆத்த வாதலினெ னாது நாமமொ | | டிலங்கு தீர்த்தமிவள் பேரொடும் | | பூத்தல் வைகுசிவ லிங்க மும்மிவள் | | புணர்ந்த பேரொடுவி ளங்குதல். |
(இ - ள்.) எளிய வழிபாட்டினையுடைய நின்னுடைய அடியேனுக்கு நின் தந்தையாகிய சிவபெருமான் பண்டு வழங்கியருளிய செல்வமனைத்தும் மீண்டுமருளிச் செய்தல்; இந்நாமகள் ஈண்டுச் சிவபெருமானுடைய அருட்குறி நிறுத்தி வழிபாடு இயற்றினளாகலின் ஈண்டுப்பண்டு என் பெயரோடு திகழாநின்ற இத்தீர்த்தம் இவள் பெயரோடும் பொலிவுறச் செய்தருளுதல் ஈண்டுத் தங்கியுள்ள சிவலிங்கமும் இவள் பெயரை அடைமொழியாகக் கொண்டு விளங்கும்படி யருளுதல். (வி - ம்.) சோத்தம் - இழிந்தோர் செய்யும் வழிபாடு. நுந்தை - சிவபெருமான். ஆத்த - விளி; இறைவ. பூத்தல் - பொலிவுறுதல (16) | சீர்க லந்துவளர் தெய்வ யானைபுணர் | | செல்வ நீவரம்வ ழங்குமிம் | | மார்க ழிச்செழும திக்க ணாதிரை | | மரீஇய பூரணைவ ருந்தினம் | | நீர்க லந்தசுனை யாடி யிவ்வயி | | னிறுத்த சோதியுரு நோக்குவோர் | | பார்க லந்தபதி னான்கு கல்வியும் | | பயின்று நாற்கவியு மாதலே. |
(இ - ள்.) புகழோடு கூடி வளராநின்ற தேவசேனையைப் புணரும் செல்வனே! நீ அடியேனுக்கு வரம் வழங்காநின்ற இந்த மார்கழியாகிய செழிப்புடைய திங்களின்கண் திருவாதிரை நாள் கூடிய இப்பூரணை எதிர்காலத்தே வரும் நன்னாளின்கண், தீர்த்தம் நிரம்பிய இச்சுனையின்கண் நீராடி இவ்விடத்தே நிறுத்திய இறைவனுடைய திருவருட் குறியைக் கண்டு பணிவோர் உலகிலே விரவிய பதினான்கு கூறுபட்ட கல்வியையும் நன்கு பயின்று நான்கு வகைப்பட்ட செய்யுளை இயற்றும் வன்மையுடைய நல்லிசைப் புலவராதல். (வி - ம்.) சீர் - அழகுமாம். இவ்வயின் - இவ்விடத்தே. பார் - உலகம். பதினான்கு கல்வி - அகத்திணை ஏழும் புறத்திணை ஏழுமாகப் பதினான்கு கூறுபட்ட கல்வி என்க. எல்லாக் கல்வியும் இவற்றுள் அடங்கும். நாற்கவி - நான்குவகைச் செய்யுள் ; அவை -ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரகவி என்பன. (17) |